இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ (SBI) வங்கிக்கு 47 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். தற்போது வங்கிகளுக்கு எல்லா ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறை விடுக்கப்படுகிறது. மேலும் இரண்டாம் சனி மற்றும் நான்காம் சனிக் கிழமை நாட்களில் வங்கிகளுக்கு விடுமுறை விடுக்கப்படுகிறது.
எஸ்பிஐ வங்கி (SBI Bank)
எல்லா பொது விடுமுறை நாட்களும் வங்கிகளுக்கு விடுமுறை விடுக்கப்படுகிறது. இந்நிலையில், மும்பையில் எஸ்பிஐ வங்கியின் கோவந்தி கிளையில் ஊழியர்களுக்கான வாரம் விடுமுறை நாள் ஞாயிற்றுக் கிழமையில் இருந்து வெள்ளிக் கிழமைகளுக்கு மாற்றப்படுகிறது. டிசம்பர் 1ஆம் தேதி முதல் வங்கி ஊழியர்களுக்கு ஞாயிற்றுக் கிழமைக்கு பதிலாக வெள்ளிக் கிழமைகள் விடுமுறை விடுக்கப்படும் என எஸ்பிஐ வங்கியின் கோவந்தி கிளை தெரிவித்துள்ளது. இச்செய்தியை கோவந்தி எஸ்பிஐ கிளை வாசலில் போர்டு வைத்து தெரிவித்துள்ளது.
கோவந்தி மும்பையில் வட கிழக்கு புறநகர் பகுதியாகும். இங்கு உள்ளூர் சிறுபான்மை மக்கள் நிறைந்து வாழ்கின்றனர். இவர்களின் வசதிக்கு ஏற்ப ஞாயிற்றுக் கிழமைகளுக்கு பதிலாக வெள்ளிக் கிழமைகள் விடுமுறை விடுப்பதற்கு கோவந்தி எஸ்பிஐ வங்கி கிளை முடிவு செய்துள்ளது. எஸ்பிஐ வங்கியின் கோவந்தி கிளை வாசலில் வைக்கப்பட்டுள்ள போர்டில், டிசம்பர் 1ஆம் தேதி முதல் எல்லா வெள்ளிக் கிழமைகளும் வங்கிக் கிளை மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டாம் சனி மற்றும் நான்காம் சனி கிழமைகளில் வங்கி கிளை மூடப்பட்டிருக்கும் என கோவந்தி எஸ்பிஐ கிளை தெரிவித்துள்ளது.
இதுபோக வாரம் தோறும் வழக்கமாக ஞாயிற்றுக் கிழமை முதல் வியாழக் கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை வங்கிக் கிளை இயங்கும் என்று கோவந்தி எஸ்பிஐ கிளை தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மும்பை தாதர் பகுதியில் உள்ள மில்லினியம் எஸ்பிஐ கிளையிலும் ஞாயிற்றுக் கிழமைகளுக்கு பதிலாக வெள்ளிக் கிழமை விடுமுறை விடுக்கப்படலாம் என சில தகவல்கள் வெளியாகின. ஆனால், தாதர் மில்லினியம் எஸ்பிஐ கிளை அதிகாரிகளோ இதை மறுத்துவிட்டனர்.
ஞாயிறு வேலை (Sunday Working)
ஏற்கெனவே மும்பையில் மட்டுமல்லாமல் நாட்டில் குறிப்பிட்ட சில இடங்களில் ஞாயிற்றுக் கிழமை அரை நாள் மட்டும் வங்கிகள் இயங்குகின்றன. இதற்கு பதிலாக சனிக்கிழமை விடுமுறை வழங்கப்படும். இந்த வரிசையில் தற்போது கோவந்தி எஸ்பிஐ கிளை ஞாயிற்றுக் கிழமை வங்கி செயல்படும் என தெரிவித்துள்ளது. எனினும், எஸ்பிஐ கோவந்தி கிளை ஞாயிற்றுக் கிழமைகளுக்கு பதிலாக வெள்ளிக் கிழமைக்கு விடுமுறை மாற்றியதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஆனால், அண்மைக்காலமாக பெரும்பாலான வங்கி சேவைகள் டிஜிட்டலுக்கு மாறிவிட்டதால், எந்தெந்த நாட்களில் வங்கி கிளை இயங்குகிறது என்பது பிரச்சினையே இல்லை என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.
மேலும் படிக்க
அதிக இலாபம் தரும் முதலீட்டுத் திட்டங்கள்: அடுத்த 10 ஆண்டுகளுக்கு இதுதான் பெஸ்ட்!
வங்கி கணக்கில் ரூ.1,000 பொங்கல் பரிசு: தமிழக அரசு அறிவிப்பு!
Share your comments