இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கரும்பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரகண்ட், பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கரும்பூஞ்சை நோயின் (Black fungal disease) பாதிப்பு தமிழகத்திலும் தாக்கத்தை ஏற்படுத்த துவங்கி உள்ளது. கோவில்பட்டி அருகே கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட பட்டறை உரிமையாளர் உயிரிழந்துள்ளார். மதுரையில் 50 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் உயிரிழப்பு
கரும்பூஞ்சை நோயின் தாக்கத்தால் தமிழகத்தில் முதல் உயிரிழப்பு பதிவாகியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த 57 வயது வெல்டிங் பட்டறை உரிமையாளர் கொரோனா (Corona) தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தார். கோவில்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, கரும்பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த 17ம் தேதி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனில்லாமல் இன்று (மே 20) உயிரிழந்துள்ளார்.
மதுரையில் பாதிப்பு
மதுரையில் 50 பேருக்கு கரும்பூஞ்சை நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றின் பக்க விளைவுகள் என டாக்டர்கள் விளக்கமளித்துள்ளனர். மேலும், ஏற்கனவே கொரோனா பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி (Immunity) குறைந்ததால் பக்க விளைவு ஏற்பட்டுள்ளதாகவும், கரும்பூஞ்சை அறிகுறி வந்த பின்பு தாமதித்தால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
சென்னையில் 5 பேர்
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 5 சர்க்கரை நோயாளிகள், கரும்பூஞ்சை நோயின் தாக்கத்தால், சென்னை எழும்பூர் அரசு கண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அங்கு, அவர்கள் 5 பேருக்கும் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த நோய் காது, மூக்கு, தொண்டை பகுதியை பாதிக்க கூடியது என்பதால் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். ஊரடங்கை முறையாக கடைப்பிடிப்பது மட்டுமே கொரோனா மற்றும் ககரும்பூஞ்சை நோய்களை விரட்டியடிக்க சிறந்த வழியாகும்.
மேலும் படிக்க
கொரோனா தடுப்பூசி தமிழகத்திலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!
கொரோனா 3-ஆம் அலையை தடுக்க நாம் இப்போதே தயாராக வேண்டும்! இந்திய மருத்துவ சங்கம் வேண்டுகோள்!
Share your comments