புதுக்கோட்டை மாவட்டத்தில் கிழக்கு பகுதி கிராமங்களில் இந்து கோயில்களில் நடைபெறும் கும்பாபிஷேகம் உள்ளிட்ட திருவிழாக்களுக்கு இஸ்லாமியர்கள் சீர் கொண்டு வரும் நிகழ்வும் அதே போல் இஸ்லாமியர்களின் மசூதி திறப்பு விழா மற்றும் ரம்ஜான் உள்ளிட்ட பண்டிகையின் போது இந்துக்கள் அவர்களின் முறைப்படி சீர் செய்து அவர்களின் விழாக்களின் பங்கேற்பதும் பல ஆண்டு காலமாக நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் அமைந்துள்ள 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பட்டவையனார், கொம்புக்கார சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களின் ஆலயங்களில் கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
இந்த குடமுழுக்கை முன்னிட்டு கீரமங்கலத்தை சுற்றிய பகுதி கிராமங்களில் இருந்து ஒவ்வொரு கிராம வாரியாக பொதுமக்கள் சீர்வரிசையை பாரம்பரிய முறைப்படி கொண்டு வந்தனர்.
இதனிடையே கீரமங்கலம் மேலக்காடு பகுதியில் வசித்து வரும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் அங்குள்ள பள்ளிவாசலில் இருந்து பழங்கள், காய்கறிகள், தேங்காய், பூ உள்ளிட்ட 14 வகை தட்டுகளை இந்து முறைப்படி கைகளில் ஏந்தியபடி நாட்டிய குதிரைகளின் நடனத்துடன், விண்ணதிரும் பட்டாசுகள் வெடிக்க, இஸ்லாமிய சிறுவர்கள் ஆட்டம் பாட்டமாக முன்னே செல்ல பின்னே அந்த ஜமாத்தை சேர்ந்தவர்கள் வரிசையாக அணிவகுத்து கீரமங்கலம் பேருந்து நிலையம், கடைவீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக வந்து பட்டவையனார் கோயிலை அடைந்தனர்.
இதேபோல் காசிம் புதுப்பேட்டையை சேர்ந்த இஸ்லாமியர்களும் நாட்டிய குதிரைகளின் ஆட்டத்துடன் கீரமங்கலம் காவல் நிலையத்தில் இருந்து சீர் தட்டுகளை கைகளில் ஏந்தியபடி ஊர்வலமாக கோயிலுக்கு வந்து தாங்கள் கொண்டு வந்த சீரை பாரம்பரிய முறைப்படி விழா தாரரிடம் அளித்தனர்.
Share your comments