கீரப்பாளையம் வட்டார விவசாயிகள் கோடை உழவு செய்ய வேண்டும் என்று வேளாண் துறையினர் ஆலோசனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேளாண் துணை இயக்குனர் சித்ரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கீரப்பாளையம் வட்டாரத்தைச் சேர்ந்த விவசாயிகள் கோடை காலத்தில் குறைந்தபட்சம் 15 நாட்கள், நிலத்தில் எந்த பணியும் செய்யாமல் ஆற வைத்து, முறைப்படுத்துவது மிக அவசியம்.ஏற்கனவே விவசாயம் செய்யும் நிலம் அல்லது ஒரு போகம் செய்யும் மானாவாரி நிலம். அல்லது நீண்ட காலமாக பராமரிக்காத தரிசு நிலம், பண்படாத நிலம் வரையிலும் கோடை உழவு மேற்கொள்வது அவசியம்.
அவ்வப்போது விவசாயம் செய்யும் நிலமாக இருதால் ஐந்து கை அல்லது ஏழு கை கலப்பை கொண்டு உழவேண்டும். நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாத நிலமாக இருந்தால் சட்டிக்கலப்பை அல்லது மண்ணை திருப்பி போடுகின்ற வகையிலான கலப்பை கொண்டு உழுவதால், மண்ணில் உள்ள சத்துக்கள் அனைத்து பகுதிகளுக்கும் சரிசமமாக கிடைக்கும்.கோடை மழையினால், நிலத்தடி நீர் உள்ளே சென்று நுண்ணுயிர் பெருக்கத்தை அதிகப்படுத்தும்.
மண்ணின் ஈரப்பதம் அதிகரித்து, குறைந்த தண்ணீர் இருந்தாலும், மண்ணின் அனைத்து அடுக்குகளுக்கும் பரவும்.கோடை மழையைப் பொறுத்து பலதானிய விதைப்பு செய்து மடக்கி உழுவதால், எதிர் காலத்தில் சிறந்த விளை நிலமாக்க மாற்றலாம். கார அமிலத்தன்மை அதிகமாக உள்ள பகுதியில் சணப்பை, தக்கை பூண்டு விதைத்து 38வது நாள் மடக்கி உழவேண்டும். மற்ற இடங்களில் அவுரி, கொழுஞ்சி மற்றும் பலதானிய விதைப்பு செய்து பயன்பெறலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Share your comments