அதிக வீரியம் உடைய உருமாறிய கொரோனா வைரசால், இந்தியாவில் தொற்று பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த தவறினால், தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசியை கூட, இது செயலற்றதாக்கிவிடும் அபாயம் உள்ளது,'' என, உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் எச்சரித்துள்ளார். இந்தியாவில், நேற்று முன் தினம் ஒரே நாளில், 4,000 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தொற்று பரவல், ஒரே நாளில், நான்கு லட்சத்தை கடந்துள்ளது.
அதிக வீரியம்
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியும், குழந்தைகள் நல மருத்துவருமான சவுமியா சுவாமி நாதன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் தற்போது பரவி வரும் வைரஸ், பி.1.617 வகையைச் சேர்ந்தது. அதிக வீரியம் உடைய இந்த உருமாறிய வைரஸ், விரைவாக பரவும் தன்மை உடையது. கடந்த ஆண்டு நம் நாட்டில் பரவிய கொரோனா வைரஸ் (Corona Virus) வகையை விட, இது பல மடங்கு ஆபத்தானது. இந்த வகை வைரஸ் குறித்து, அமெரிக்கா, பிரிட்டன் சுகாதாரத் துறையினர் கவலை தெரிவித்து உள்ளனர். நம் நாட்டில் தற்போது தொற்று பரவல் அதிகரித்துள்ளதற்கு, இந்த வகை வைரசை மட்டும் காரணமாக சொல்ல முடியாது. தொற்று தடுப்பு நடவடிக்கையை நாம் காற்றில் பறக்க விட்டுவிட்டோம். கூட்டம் கூடுவதையும், மக்கள் பயமின்றி இயல்பான வாழ்க்கை வாழவும் அனுமதித்தது பெரிய தவறு.
2 சதவீதம் பேர்
கொரோனா முடிவுக்கு வந்துவிட்டது என நம்பி, முக கவசம் அணிவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மக்கள் கைவிடத் துவங்கியதே, இரண்டாம் அலைக்கு காரணமாக அமைந்து விட்டது. இப்போது, தடுப்பூசி போடும் பணியை அரசு வேகப்படுத்தி உள்ளது. தடுப்பூசி தயாரிப்பில், உலக அளவில் முன்னிலை வகிக்கும் இந்தியாவில், 2 சதவீதம் பேர் தான் இதுவரை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். நாட்டின், 70 - 80 சதவீத மக்கள் தடுப்பூசி (Vaccine) போட்டுக் கொள்ள, பல மாதங்கள் ஆகிவிடும். எனவே, தடுப்பூசி மட்டுமே நமக்கு முழு பாதுகாப்பை அளித்து விடாது. மக்களின் சுய கட்டுப்பாடும், சிறந்த மருத்துவ வசதிகள் மட்டுமே, இந்த நிலைமையில் இருந்து நம்மை மீட்க உதவும்.
இந்த உருமாறிய வைரஸ், அதிக அளவில் பரவுவதால், அது மேலும் உருமாறக் கூடிய அபாயம் உள்ளது. அப்படி உருமாறும் போது, தற்போது பயன்பாட்டில் உள்ள தடுப்பூசிகளை கூட அது செயலற்றதாக்கிவிடக் கூடிய அபாயம் உள்ளது. அப்படி நிகழ்ந்தால், அது இந்த உலகத்துக்கே அச்சுறுத்தலாக மாறிவிடக் கூடும்.இவ்வாறு அவர் கூறினார்.
6 அடி இடைவெளி கூட ஆபத்தானது!
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் சமீபத்தில் வெளியிட்ட வழிகாட்டுதலில் கூறப்பட்டுள்ளதாவது: இருமல் மற்றும் தும்மலின் போது மட்டுமல்லாமல், நாம் பேசும் போதும், உடற்பயிற்சி செய்யும் போதும், மெலிதாக மூச்சு விடும்போதும் கூட, நம் நாசியில் இருந்து மிக மெலிதான திரவங்கள் காற்றில் கலந்து மிதக்கும். அவை, சில நிமிடங்களில் இருந்து, சில மணி நேரங்கள் வரை காற்றில் கலந்திருக்கும்.
கொரோனா நோயாளியின் மூச்சுக் காற்றில் இருந்து வெளியேறும் இந்த சிறு திரவ துகள்கள், நோய் பரப்பும் அபாயம் உள்ளவை.எனவே, நோயாளியிடம் இருந்து, 3 - 6 அடி துாரத்தில் நிற்பது கூட தொற்றை ஏற்படுத்தக் கூடும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் படிக்க
வேகமாக வைரஸ் பரவுவது எப்படி? அதிர்ச்சி தகவல் அளித்த ஆராய்ச்சியாளர்கள்!
அவசர பயன்பாட்டுக்கு பவுடர் வடிவில் கொரோனா மருந்து! மத்திய அரசு ஒப்புதல்
Share your comments