நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பல நாட்களாக நெல் கொள்முதல் செய்யாத காரணத்தால் ஆயிரக்கணக்கான நெல் முட்டைகள் மழையில் நனைந்து நாசமாவதால் விவசாயிகள் வேதனையில் உள்ளனர்.
அறுவடை பணிகள் தீவிரம்
திருவாரூர் மாவட்டம் முழுவதும் சுமார் 90 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர். இங்கு சுமார் 75 அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிலையில் குடவாசல் ஒன்றியத்திற்குட்பட்ட வடமட்டம், கீழவயலூர், அம்பாச்சிபுரம், முஷ்டக்குடி, பரவக்கரை உள்ளிட்ட பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் முடிந்த நிலையில் அதனை வடமட்டம், பரவக்கரை உள்ளிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு சென்று நெல்லை கொள்முதலுக்காக அடுக்கி வைத்துள்ளனர்.
நெல் மூட்டைகள் பாதிப்பு
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வழக்கமாக நாளொன்றுக்கு 800 மூட்டைகளுக்கு பதில் 1000 மூட்டைகள் வரை கொள்முதல் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், ஒரே நேரத்தில் விவசாயிகள் நெல்லை அறுவடை செய்து வருவதால் அவர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால் டோக்கன் வழங்கப்பட்டு 10 நாட்கள் ஆகியும் அதிகாரிகள் நெல்லை கொள்முதல் செய்யவில்லை என்று விவசாயிகள் குற்றசாட்டுகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் பெய்து வரும் மழை காரணமாகத் திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மழையில் நனைந்து முளைப்புத்திறன் ஏற்பட்டு அழுகும் நிலை இருந்து வருகிறது இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கோரிக்கை
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், வேளாண் அதிகாரிகள் அறுவடை தொடங்கும்போதே பயிர்க் காப்பீடு குறித்துக் கணக்கெடுக்கும் பணிகள் முடிவடைந்ததால் தற்போது நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பாதிக்கப்பட்டிருக்கும் நெல் மூட்டைகளுக்கு எந்தவித இழப்பீடும் கிடைக்காத நிலை உள்ளது. எனவே தமிழக அரசு தலையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் படிக்க...
குறுவை நெல் சாகுபடியில் தமிழகம் சாதனை - தமிழக அரசு!!
காதி நிறுவனம் சார்பில் பட்டு முகக்கவசங்கள் கொண்ட பரிசுப்பெட்டி அறிமுகம்!!
வேளாண் துறை சார்ந்த 112 தொழில் நிறுவனங்களுக்கு ரூ.11.85 கோடி நிதி உதவி!!
Share your comments