விவசாயம் தொடர்பான மூன்று மசோதாக்களுக்கு (3 Bill), கடந்த ஜூன் மாதம் 5ஆம் தேதியன்று நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அந்த மூன்று மசோதாக்களும் மக்களவையில் நடப்புக் கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட்டுள்ளன. இம்மூன்று மசோதாக்களில் இருப்பது என்ன, ஏன் விவசாயிகள் இதனைக் கடுமையாக எதிர்க்கிறார்கள்? என்பதை நாம் நிச்சயம் அறிந்து கொள்ள வேண்டும்.
மசோதாக்கள் என்னென்ன?
-
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம் 2020 (Essential Commodities (Amendment) Act 2020).
-
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகச் (மேம்பாடு மற்றும் எளிமைப்படுத்துதல்) சட்டம் 2020 (Farming Produce Trade and Commerce (Promotion and Facilitation) Act 2020).
-
விவசாயிகளுக்கு (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் 2020 (The Farmers (Empowerment and Protection) Agreement on Price Assurance and Farm Services Act 2020).
மசோதாக்கள் சொல்வது என்ன?
முதல் மசோதா
அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டத்தை எடுத்துக்கொண்டால், இந்தியாவில் வெங்காயம், பருப்பு போன்ற பொருட்களின் விலை உயரும்போது அவற்றை ஏற்றுமதி (Export) செய்யவும் சேமித்து வைக்கவும் அரசு அவ்வப்போது கட்டுப்பாடுகளை விதிக்கிறது. இப்போது வந்துள்ள சட்டத் திருத்தத்தின்படி இம்மாதிரி கட்டுப்பாடுகளை பின்வரும் சூழ்நிலையில் தான் விதிக்க முடியும். அதாவது, தோட்டப் பயிர்களைப் பொறுத்தவரை, அவற்றின் விலை கடந்த 12 மாதங்களின் சராசரி விலையைவிட 100% அதிகரிக்க வேண்டும். தானியங்களைப் பொருத்தவரை, கடந்த ஐந்து ஆண்டுகளின் சராசரி விலையைவிட 50% அதிகரிக்க வேண்டும். அப்படி இருந்தாலும்கூட இந்தக் கட்டுப்பாடு உணவுப் பொருட்களைப் பதப்படுத்தும் நிறுவனங்களுக்குப் பொருந்தாது. விளைபொருட்களை உற்பத்தி செய்யவும், சேமித்து வைக்கவும், விற்பனை செய்யவும், வேறு இடங்களுக்குக் கொண்டு செல்லவும் விவசாயிகளுக்கு முழு சுதந்திரம் (Freedom) இந்த சட்டத் திருத்தத்தின் மூலம் அளிக்கப்படும் என்கிறது மத்திய அரசு. இதனால், இந்தத் துறையின் பொருளாதாரம் மேம்பட்டு, நேரடி அந்நிய முதலீடு (investment) விவசாயத் துறையில் கிடைக்குமென மத்திய அரசு நம்புகிறது. உணவு விநியோகச் சங்கிலியில் தேவைப்படும் குளிர்பதன கிடங்குகள் (Refrigerated warehouses) போன்றவற்றைக் கட்டத் தேவைப்படும் முதலீட்டை இந்தச் சட்டம் எளிதாக்கும் என்பது இந்தச் சட்டத்தை ஆதரிப்பவர்களின் வாதம்.
இரண்டாவது மசோதா:
இரண்டாவதாக உள்ள விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தக சட்டத்தைப் பொருத்தவரை, விவசாய விளைபொருட்களை மாநிலத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எந்த இடத்திலும் வியாபாரமும், வர்த்தகமும் (Trade) செய்ய வழிவகுக்கிறது. இதன் மூலம், மாநில அரசுகளால் இயக்கப்படும் விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்திற்கு (Agricultural Regulatory Sales Hall) வெளியிலும் பொருட்களை விற்க வழிசெய்யப்படுகிறது. இதனால், விவசாயிகளுக்கு தங்கள் உற்பத்தி பொருட்களுக்குக் கூடுதல் விலை கிடைக்குமென அரசு கூறுகிறது. ஆனால், விவசாய வர்த்தகத்தின் மீது மாநில அரசுக்கு எந்தவித உரிமையும், கட்டுப்பாடுமின்றி செயலிழக்கும் அபாயம் உண்டு. வேறு மாநிலத்தைச் சேர்ந்த வியாபாரிகள், மற்றொரு மாநிலத்தில் எங்கு வேண்டுமானாலும் வந்து பொருட்களை வாங்கிச் சொல்லலாம் என்பதால், ஒரு மாநிலத்தில் ஒரு பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும், மாநில அரசால் ஏதும் செய்ய முடியாது என்ற அச்சமும் இருக்கிறது. இந்தத் தட்டுப்பாட்டை மத்திய அரசு தான் சரிசெய்ய வேண்டும்.
மூன்றாவது மசோதா:
விலை உத்தரவாதம், விவசாய சேவைகள் ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டமானது, விவசாயிகளுடன் எந்த மூன்றாவது நபரும் ஒப்பந்தம் ஒன்றைச் செய்துகொள்ள வழிவகுக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், விவசாய கான்ட்ராக்டர்களுக்கு இந்தச் சட்டத்தின் மூலம் சட்டரீதியான பாதுகாப்பு கிடைக்கும்.
மத்திய அரசைப் பொருத்தவரை இந்த மூன்று சட்டங்கள் மூலமும் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களுக்கு நல்ல விலையைப் பெற முடியும் மற்றும் கூடுதலான வர்த்தக வாய்ப்புகள் கிடைக்கும் என்கிறது. மேலும், நுகர்வோரும் (Consumer), வர்த்தகர்களும் பயனடைவார்கள். ஆகவே மூன்று தரப்பினருக்கும் பயனளிக்கக்கூடிய சட்டங்கள் இவை என்கிறது மத்திய அரசு. இந்தியாவில் விவசாயம் என்பது மாநில அரசுக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. ஆகவே விவசாயம் தொடர்பாக இயற்றப்பட்டிருக்கும் இந்த மூன்று சட்டங்களும் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாக அமைகிறது. விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு வெளியிலும் விவசாயப் பொருட்களை விற்பனை செய்ய இந்தச் சட்டம் அனுமதிப்பது பல மாநிலங்களில் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடம்:
விவசாய ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் என்பது தமிழ்நாட்டில் வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறையின் கீழ் இயங்கிவரும் விற்பனைக் கூடங்களைக் குறிக்கிறது. விவசாயத்தின் மூலம் உற்பத்தியாகும் பொருட்களை வாங்கவும் விற்கவும் முறைப்படுத்தவும், 1987ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை விளை பொருள் விற்பனை (ஒழுங்கு முறை) சட்டத்தை பிறப்பித்து, இந்த ஒழுங்கு முறைக் கூடங்களை தமிழ்நாடு அரசு உருவாக்கியது.
விற்பனைக் கூடங்களின் எண்ணிக்கை:
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 268 ஒழுங்குமுறை விற்பனை கூடங்களும், 108 கிராமப்புற சேமிப்பு கிடங்குகளும், 108 தரம்பிரிக்கும் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. நிலக்கடலை, புளி, எள், கரும்பு வெல்லம், நெல், பருத்தி, கேழ்வரகு, கம்பு, சோளம், வரகு, கொள்ளு, ஆமணக்கு, தேங்காய், மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு, துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் மறைமுக ஏலத்தின் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த விற்பனை நடக்கும்போது விவசாயி, வர்த்தகர், வேளாண்துறை அதிகாரி ஆகியோர் இருப்பார்கள். பொருட்கள் வாங்கப்பட்டவுடன் விவசாயிக்கு பணம் அளிக்கப்பட்டுவிடும். இப்போது மத்திய அரசு கொண்டுவந்திருக்கும் சட்டத்தின் மூலம் எல்லா மாநிலங்களிலும் விவசாய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களுக்கு வெளியிலும் வர்த்தகர்கள் தங்கள் பொருட்களை வாங்க முடியும். ஆனால், இதில் சில பிரச்சனைகள் இருக்கின்றன. விவசாய ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் 1-2 சதவீத கட்டணம் விதிக்கப்படுகிறது. வெளியில் இந்தக் கட்டணம் இருக்காது என்பதால், பலரும் வெளியிலேயே விற்பனை செய்ய முயல்வார்கள். சில சமயங்களில் களத்திலேயே பொருட்களை கிடைத்த விலைக்கு விற்கவும் விவசாயிகள் முன்வரக்கூடும். இதன் காரணமாகவே, விவசாய ஒழுங்கு முறை விற்பனைக்கூடம் சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் இந்தச் சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் பிடிக்க...
விவசாயிகளே இனி கவலை வேண்டாம்! மின் இணைப்பு பெற விஏஓ சான்றிதழ் மட்டுமே போதும்!
மத்திய அரசின் இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஆண்டுக்கு ரூ.36,000/- பெறலாம்?
Share your comments