1. செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் மும்முனை மின்ராசரம் நிறுத்தம் - விவசாயிகள் கவலை!!

Daisy Rose Mary
Daisy Rose Mary

டெல்டா மாவட்டங்களில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வந்த 24 மணி நேர மும்முனை மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இதனால், சரியான நேரத்தில் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாமல் வயல்வெளிகள் வாடி வருவதாகவும் வேதனை தெரிவித்துள்ளனர்.

குறுவை, சாம்பா சாகுபடியில் ஏமாற்றம்

தஞ்சை, நாகை, உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்தாண்டு கடும் நெருக்கடியில் 7.71 லட்சம் டன் குறுவை சாகுபடி செய்யப்பட்டது. ஆனால், உரியநேரத்தில் கொள்முதல் நிலையங்களில் நெல் கொள்முதல் செய்வதில் தொய்வு ஏற்பட்டது. அதேபோல, சம்பா சாகுபடியின் போது கடந்த ஜனவரி மாதம் அறுவடை நேரத்தில் பெய்த தொடர் மழையால் மகசூல் பெருமளவில் பாதிக்கப்பட்டது.

24 மணி நேர மும்முனை மின்சாரம் - இபிஎஸ் பரப்புரை

இதைத் தொடர்ந்து, விவசாயிகள் பம்புசெட் மூலம் கோடை சாகுபடி மற்றும் முன்பட்ட குறுவை சாகுபடியில் ஈடுபட்டனர். இதில், கடந்த காலங்களில் கோடை சாகுபடிக்கு மும்முனை மின்சாரம் 12 மணி நேரம் வழங்கப்பட்டு வந்தது. இதனிடையே, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஏப்.1-ம் தேதி முதல் விவசாயத்துக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.

டெல்டா மாவட்டங்களில் கோடை உழவு

இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது கோடை சாகுபடி மற்றும் முன்பட்ட குறுவை சாகுபடியாக தஞ்சாவூர் மாவட்டத்தில் 40 ஆயிரம் ஏக்கர், திருவாரூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் ஏக்கர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் 35 ஆயிரம் ஏக்கர் என 1 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் அறிவித்தபடி கடந்த 1-ம் தேதி முதல் 24 மணி நேரமும் சீராக மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்பட்டு வந்தது.

வாக்குப்பதிவு பின்னர் மும்முனை மின்சாரம் நிறுத்தம்

ஆனால், தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற கடந்த ஏப்ரல்.6ம் தேதிக்கு பிறகு தேவைக்கேற்ப மும்முனை மின்சாரம் வழங்கப்படவில்லை எனவும், இதனால் பயிர்கள் வயல்வெளிகளில் தண்ணீரின்றி வாடத் தொடங்கியுள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

பழுதாகும் மின் மோட்டார்கள்

இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட மானாவாரி பகுதி விவசாயிகள் சங்கச் செயலாளர் வைத்திலிங்கம் கூறுகையில், முதல்வர் அறிவிப்பால் எங்களுக்கு 6 நாட்கள் மட்டுமே 24 மணிநேர மும்முனை மின்சாரம் தொடர்ச்சியாக கிடைத்தது. வாக்குப்பதிவு முடிந்த நிலையில், 6-ம் தேதிக்குப் பின் 12 மணி நேரத்துக்குக்கூட மும்முனை மின்சாரம் விநியோகிக்கப்படவில்லை. எப்போது மின்சாரம் வரும், எப்போது போகும் எனத் தெரியவில்லை. மேலும், குறைந்த அழுத்த இருமுனை மின்சாரம் காரணமாக மோட்டார்கள் பழுதாகி வருகின்றன. இதற்கிடையே, தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், போதிய நீரின்றி பயிர்களும் கருகி வருகின்றன” என்றார்.

மின்சாரம் நிறுத்தம் - அதிகாரிகளின் பதில்

மேலும், இதுதொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் விஜயகவுரியிடம் கேட்டபோது, “டெல்டா மாவட்டங்களில் விவசாயத்துக்கு தேவையான மும்முனை மின்சாரம் என்பது, மாநில அளவிலான விநியோகப் பிரிவிலிருந்து, மின் உற்பத்திக்கு ஏற்ப வழங்கப்படுகிறது” என்றார். முதல்வரின் உத்தரவு குறித்து தங்களுக்கு ஏதும் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க...

DAP உரம் விலை உயர்வு: 50% மேல் விலை அதிகரிப்பால் விவசாயிகள் கண்டனம்!!

உரங்கள் விலை உயர்வால் விவசாயிகள் வேதனை! விலைவுயர்வைக் குறைக்க கோரிக்கை!

கோடை நெல் உழவில் மேற்கொள்ள வேண்டிய பூச்சி மேலாண்மை முறைகள்! - வேளாண் துறை ஆலோசனை!!

English Summary: Three-phase power outage in delta districts, Farmers worried Published on: 10 April 2021, 05:45 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.