பொதுமக்கள் மின்துறை சார்ந்த குறைகளைத் தெரிவித்திட"மின்னகம்" என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.
புதிய மின் நுகர்வோர் சேவை மையம்
தமிழ்நாட்டில் உள்ள மூன்று கோடியே பத்து இலட்சம் மின் இணைப்புதாரர்களின் மின்கட்டணம் தொடர்பான சந்தேகங்கள், புதிய மின் இணைப்பு தொடர்பான தகவல்கள், மின்னழுத்த ஏற்ற / இறக்கம், உடைந்த மின்கம்பங்கள், தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், ஆபத்தான நிலையில் உள்ள மின்மாற்றிகள், மின்தடை குறித்த தகவல், குறைந்த மின்னழுத்தம், உயர் மின்னழுத்தம் போன்ற மின்துறை சார்ந்த தகவல்கள் / புகார்களைப் பொதுமக்கள் தெரிவிக்க, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை, அண்ணா சாலையிலுள்ள தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள "மின்னகம்" என்ற புதிய மின் நுகர்வோர் சேவை மையத்தைத் திறந்து வைத்து, அதற்கான பிரத்யேகமான 9498794987 என்ற கைப்பேசி எண்ணையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
24மணி நேரம் செயல்படும்
இப்புதிய மின் நுகர்வோர் சேவை மையம், 24 மணி நேரமும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் ஒரு ஷிப்ட்டுக்கு 65 நபர்கள் வீதம் மூன்று ஷிப்டுகளுக்கு 195 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அப்பணியாளர்கள் பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்களைக் கணினி மூலம் பதிவு செய்து, இப்புகார்கள் சம்மந்தப்பட்ட மேற்பார்வைப் பொறியாளர், செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவிப் பொறியாளர் அலுவலகங்களுக்கு, CC-MAC மென்பொருள் தொழில்நுட்பம் வாயிலாக தானியங்கி Whatsapp மூலம் உடனடியாகச் சென்றடைந்து, அதன்மீது துரித நடவடிக்கை எடுக்கப்படும். பெறப்படுகின்ற புகார்கள் குறித்த தகவல்களை ஒருங்கிணைக்க தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 44 மேற்பார்வைப் பொறியாளர் அலுவலகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் தலா 3 நபர்கள் வீதம் 132 நபர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
மேலும், புகார்தாரரின் கைப்பேசி எண்ணிற்குப் புகாரின் எண் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டு, அப்புகார்கள் சரி செய்யப்பட்டவுடன், அது குறித்த தகவலும், குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். மின்வாரியம் தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் சமூக வலைதளம் (Facebook, Twitter, Instagram) மூலம் பதிவேற்றப்படும் புகார்களும் கண்காணிக்கப்பட்டு நடவடிக்கை எடுப்பதற்கு Social Media Cell அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு வரும் 28ம் தேதி வரை நீட்டிப்பு!!
Share your comments