தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி அனைத்துக்கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அக்கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். திமுக தேர்தல் அறிக்கையில் மக்களின் நலனுக்காக 505 அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அறிவிப்புகள் பின்வருமாறு:
தமிழ்மொழி மேம்பாடு!
செம்மொழி தமிழுக்கு மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் உலகப் பொதுமறையான திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசை தொடர்ந்து, தி.மு.க. வலியுறுத்தும்.
ஒவ்வொரு துறையிலும், அலுவலகத்திலும் தமிழ் மொழி அலுவலக பயன்பாட்டில் உறுதி செய்வதற்கும், மேம்படுத்துவதற்கும் தமிழ் அலுவல் மொழி வளர்ச்சிப் பிரிவு அமைக்கப்படும்.
விவசாயிகள் மேம்பாடு
-
3 வேளாண் சட்டங்களையும் திரும்பப்பெற தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி, அவற்றை ரத்து செய்ய மத்திய அரசு சட்டம் இயற்றவேண்டும் என வலியுறுத்தப்படும்.
-
சிறு, குறு விவசாயிகளின் கடன்கள் முறையாக நிதி ஒதுக்கி முழுவதுமாக தள்ளுபடி செய்யப்படும்.
-
நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண்மை ஆய்வு மையம் தொடங்கப்படும்.
-
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை நாட்களின் எண்ணிக்கை 100-ல் இருந்து 150 ஆக அதிகரிக்கப்படும். தினக்கூலி ரூ.300 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
-
மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் தடையின்றி இலவச மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும்.
-
3 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் மின் மோட்டார் வசதி இல்லாத விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் வாங்கும்போது ரூ.10 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படும்.
-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஜூனூரில் தோட்டக்கலை பல்கலைக்கழகம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
-
மதுரையில் வேளாண் பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.
-
ஈரோட்டில் மஞ்சள் ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படும்.
-
காவிரி-குண்டாறு இணைப்பு திட்டத்தை தி.மு.க. அரசு விரைந்து நிறைவேற்றி பாசன வசதியும், குடிநீரும் கிடைத்து வறண்ட பகுதிகள் பயன்பெறச்செய்யும்.
-
ரூ.2 ஆயிரம் கோடி செலவில் 200 தடுப்பணைகள் கட்டப்படும்.
-
நொய்யல் ஆறு சீர்ப்படுத்தப்பட்டு, பவானி-நொய்யலாறு-அமராவதியாறு இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும்.
பெட்ரோல்-டீசல் விலை குறைக்க நடவடிக்கை
-
அனைத்து தரப்பு மக்களின் நலனை கருத்தில்கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.4-ம் குறைக்கப்படும்.
-
ஆவின் பாலின் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும்.
ஊழல் புகார் விசாரிக்க தனி நீதிமன்றம்
-
லோக் ஆயுக்தா முறையாகவும், முழுமையாகவும் செயல்பட தேவையான நடவடிக்கைகளை திமுக அரசு உடனடியாக மேற்கொள்ளும்.
-
ஊழல் செய்பவர்கள் மீது சட்ட விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்கவும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படும். தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் ஊழல் புகார்களுக்கு ஆளாகி இருக்கும் அ.தி.மு.க. அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரித்து நடவடிக்கை மேற்கொள்ள தனி நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
மாணவர்களுக்கு ‘டேப்லெட்’
-
அனைத்து அரசு பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின்கள் இலவசமாக வழங்குவதற்கு தானியங்கி எந்திரங்கள் அமைக்கப்படும். அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் கல்லூரிகளிலும் இந்த வசதி செய்து தரப்படும்.
-
தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் 4-ம் தலைமுறை, 5-ம் தலைமுறை (4ஜி, 5 ஜி) மாதம் 10 ஜி.பி. பதிவிறக்கம் செய்யும் வசதியுடன் கூடிய இணையதள இணைப்புடன் ‘டேப்லெட்' அரசு செலவில் வழங்கப்படும். அனைத்து கல்வி நிலையங்களிலும் வைபை வசதி செய்து தரப்படும்.
தமிழர்களுக்கு 75% வேலைவாய்ப்புகள்
-
குடும்பத்தில் முதல் தலைமுறை பட்டம் பெற்ற ஒருவருக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படும்.
-
தமிழகத்தில் அமைந்துள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீதம் வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க சட்டம் இயற்றப்படும்.
மாதம் ஒரு முறை மின்கட்டணம்
-
மாதம் ஒரு முறை மின் உபயோகம் கணக்கிடும் முறை கொண்டுவரப்படும்.
-
சூரிய ஒளி, காற்றாலை போன்ற மாசற்ற மின் உற்பத்தி நிலையஙு்களை அமைத்து, அவற்றின் மூலம் 20 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்து மக்களுக்கு குறைந்த விலையில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பெண்களுக்கு 40% இடஒதுக்கீடு
அரசு பணிகளுக்கு செல்லும் பெண்களுக்கு பேறுகால விடுமுறையை 12 மாதங்களாக உயர்த்தி வழங்கப்படும்.
அரசு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
பேறுகாலத்தில் மகளிர் உடல்நலம் பேணுவதற்காக 8 மாதத்துக்கு, மாதம் ரூ.3 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.24 ஆயிரமாக வழங்கப்படும்.
இவைகளைத் தவிர மேலும் பல அறிவிப்புகள் திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.
Share your comments