கூட்டுறவுச் சங்கங்களில் 5 சவரன் நகைக் கடன் தள்ளுபடி குறித்த அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்
அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை
மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் உள்ளிட்ட 6 தென் மாவட்டங்களின் கூட்டுறவுத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில், கூட்டுறவு சங்கங்கள் வாயிலாக விவசாயிகளுக்குப் பயிர்க்கடன் வழங்குதல், உர விநியோகம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் குறித்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் கொரோனா நிவாரண நிதி, 14 மளிகை பொருட்கள் தொகுப்பு உள்ளிட்டவை மக்களுக்குத் தடையின்றி கிடைக்கச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
நகைக் கடன் தள்ளுபடி
இதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய, அமைச்சர் ஐ.பெரியசாமி, விவசாயிகளுக்குத் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாக இந்த ஆண்டு கடன்கள் வழங்க 11,500 கோடிக்கு மேல் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைபாடு இல்லாமல் அனைத்து தரப்பு விவசாயிகளுக்கும் பயிர்க் கடன் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதேபோல், 2.10 கோடி ரேஷன் அட்டை தாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி, மளிகை பொருட்கள் தொகுப்பு வழங்குவது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது என்றார்.
திமுக அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது, அரசின் திட்டங்களை விவசாயிகளுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் முழுமையாக கொண்டு சேர்ப்பதில் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறோம்.
மேலும், கூட்டுறவுச் சங்கங்களில் 5 பவுன் நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான அரசாணை விரைவில் பிறப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
முறைகேடுகள் மீது உரிய நடவடிக்கை
மேலும், மழையால் சேதமடையும் விளை பொருள்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கடந்த ஆட்சியில் விவசாயிகள் அல்லாதவர்களுக்குப் பயிர்க் கடன் தள்ளுபடி கொடுத்து உள்ளதாக நிறையப் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. அது குறித்து ஆய்வு செய்து, தவறு நடந்தது உறுதி செய்யப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
மேலும் படிக்க...
விவசாய நகைக்கடனை முறையாக செலுத்தியவர்களா நீங்கள்! உங்களுக்கு 3% வட்டி மானியம் அறிவிப்பு! - NABARD
ஒரு மாதத்திற்குள் சம்பா பருவ பயிா் காப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை - வேளாண் துறை அமைச்சா்!!
Share your comments