1. செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிப்பு! - 27 மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி!!

Daisy Rose Mary
Daisy Rose Mary
Credit : Daily thanthi

தமிழ்நாட்டில் சில தளர்வுகளுடன் ஊரடங்கை வரும் 21 ஆம் தேதி வரை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மதுக்கடைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா வரைஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்காக, தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாத காலமாக ஊரடங்கு சில தளர்வுகளுடன் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 14-6-2021 அன்று காலை 6 மணிக்கு முடிவுக்கு வரும் நிலையில், நோய்த் தொற்றின் தன்மையினை மாவட்ட வாரியாக ஆய்வு செய்தும், நோய்த் தொற்று பரவாமல் தடுத்து, மக்களின் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் நோக்கத்திலும், இந்த முழு ஊரடங்கு 14-6-2021 முதல் 21-6-2021 காலை 6-00 மணி வரை, மேலும் ஒரு வார காலத்திற்கு நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளேன்.

வழிகாட்டு நடைமுறைகள்

இந்த ஊரடங்கின் போது செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

  • கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).

  • கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

  • அனைத்து கடைகளும், குளிர் சாதன வசதி இல்லாமல் செயல்படுவதோடு, கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

  • கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

11 மாவட்டங்களில் தொடரும் முழு ஊரடங்கு

இந்த ஊரடங்கின் போது, அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட செயல்பாடுகள் தொடர்ந்து அனுமதிக்கப்படும். நோய்த் தொற்றுப் பரவல் கட்டுக்குள் வந்திருந்தாலும், கோயம்புத்தூர், நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நோய்த் தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதைக் கருத்தில் கொண்டும், அதே சமயம் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது ஏறகனவே அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளுடன், மேற்காணும் 11 மாவட்டங்களில் கூடுதலாக சில தளர்வுகளுடன் 14-6-2021 முதல் அனுமதி அளிக்கப்படுகிறது.

27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்க அனுமதி

மேலே குறிப்பிட்ட 11 மாவட்டங்களைத் தவிர, இதர 27 மாவட்டங்களில் நோய்த் தொற்று குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள சில செயல்பாடுகளுடன் கூடுதலாக கீழ்க்கண்ட செயல்பாடுகளும் அனுமதிக்கப்படும். மதுக்கடைகள் திறக்கவும் அனுமதி

மேலும் சில தளர்வுகள் அறிவிப்பு

  • அழகு நிலையங்கள், சலூன்கள் (Beauty Parlour, Saloons, Spas) குளிர் சாதன வசதி இல்லாமல் திறக்க அனுமதி

  • பூங்காக்கள் மற்றும் விளையாட்டு திடல்களில் காலை 6.00 மணி முதல் காலை 9.00 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படும்.

  • வேளாண் உபகரணங்கள், பம்பு செட் (Pump set) பழுது நீக்கும் கடைகள் (விற்பனை கடைகள் அல்ல) காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

  • கண்கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

  • மண்பாண்டம் மற்றும் கைவினைப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் விற்பனை காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

  • மிக்சி, கிரைண்டர், தொலைக்காட்சி போன்ற வீட்டு உபயோக மின் பொருட்களின் பழுதுநீக்கும் கடைகள் காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

  • டாஸ்மாக் கடைகள் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

  • பள்ளி, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை தொடர்பான நிருவாகப் பணிகள் அனுமதிக்கப்படும்.

  • ஏற்கனவே அனுமதிக்கப்பட்டுள்ள ஏற்றுமதி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்களுக்கு இடுபொருள் தயாரித்து வழங்கும் நிறுவனங்கள் 50 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும்.

  • தற்போது இதர தொழிற்சாலைகளும் 33 சதவிகிதம் பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும்.

பொது வேண்டுகோள்

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
மேலும், கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க....


கன்றுக்குட்டிகளை விற்று கொரோனா நிதி வழங்கிய மாற்றுத்திறனாளி!

அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் பள்ளிகளை மூட உத்தரவு!!

English Summary: TN lockdown extended till 20th june, Govt allowed to open Tasmac shops in 27 district Published on: 11 June 2021, 08:15 IST

Like this article?

Hey! I am Daisy Rose Mary. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.