தேங்காய் மற்றும் கொப்பரை விலை வரும் மாதங்களில் குறைய வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.
கொப்பரை தேங்காய் உற்பத்தி
வேளாண் மற்றும் உழவர் நல அமைச்சகத்தின் இரண்டாவது முன் கூட்டிய மதிப்பீடுகளின் படி 2019-20 ஆம் ஆண்டில் நம் நாட்டில் தேங்காய் 21.53 இலட்சம் ஹெக்டரில் 146.95 இலட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திரபிரதேசம் ஆகியவை தேங்காய் உற்பத்தி செய்யும் முக்கிய மாநிலங்களாகும். தமிழகத்தில் 4.37 இலட்சம் ஹெக்டரில் 37.01 இலட்சம் டன்கள் தேங்காய் (2019-20) உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தேங்காய் முக்கியமாக கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் பயிரிடப்படுகிறது.
கொப்பரை விலை ஆய்வு
பெருந்துறை சந்தைக்கு தேங்காய் வரத்தானது இப்பருவத்தில் கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிலிருந்து 2021 ஜனவரி இறுதியில் மற்றும் பிப்ரவரி மாதங்களில் வர தொடங்கும். நல்ல பருவமழையின் காரணமாக கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது தேங்காய் உற்பத்தி அதிகரித்தாலும், அதிக வரத்து காரணமாக அடுத்த இரண்டு மாதங்களில் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம், கடந்த 20 ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய தேங்காய் மற்றும.கொப்பரை விலையினை ஆய்வு செய்தது.
தரமான கொப்பரை கிலோ ரூ.100 - 105
மேலும் பெருந்துறை வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை மையத்தில் சந்தை ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவின் அடிப்படையில். பிப்ரவரி - மார்ச் 2021 வரை தரமான தேங்காயின் பண்ணை விலை கிலோவுக்கு ரூ.33 முதல் ரூ 35 வரை இருக்கும் எனவும் மற்றும் நல்ல தரமான கொப்பரை கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ105 வரை இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாட்டின் முக்கிய உற்பத்தி மையங்கள் மற்றும் பிற மாநிலங்ககளிருந்து வரும் வரத்ததை பொறுத்து விலையில் மாற்றம் இருக்கும். எனவே, விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர்.
மேலும் விவரங்களுக்கு, தொடர்பு கொள்ளவும்
உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைத் தகவல் மையம்
வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டுஆய்வு மையம்
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர்-641 003
தொலைபேசி -0422-2431405
Share your comments