தெற்கு வங்கக்கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள வளி மண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக, டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது .
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்னும் முடிவுக்கு வராத நிலையில், தமிழகத்தில் தொடர்ந்து வறண்ட வானிலை காணப்படுகிறது குறிப்பிடதக்கது. வடகிழக்கு பகுதியில் இருந்து குளிர்ந்த காற்று வீசுவதால் தமிழகம், ஆந்திராவில் தற்போது பனிப் பொழிவுடன் கூடிய குளிர் நிலவுகிறது. இதனால் மழை பெய்வது குறைந்திருக்கிறது. இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவி வருகிறது. பகலில் வெயில் கொளுத்துவதும் , இரவில் குளிர்வதுமாக சூழ்நிலை நிலவுகிறது.
இதற்கிடையே , இலங்கையை ஒட்டிய கிழக்கு கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது, குறிப்பிடதக்கது. அது மெதுவாக வடக்கு மற்றும் வட மேற்கு திசை நோக்கி நகர்கிறது. இதனால் தென் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று லேசான மழை பெய்துள்ளது. குறிப்பாக சிவகிரியில் 10 மிமீ மழை பதிவாகியுள்ளது.
இந்நிலையில் , வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மேலும் நகர்ந்து வருவதால், டெல்டா மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்களில் சில இடங்களில் லேசான மழை இன்று பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
மேலும் , நாளை கடலோர மாவட்டங்கள் அதை ஒட்டியுள்ள உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யும் . பிற மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும், மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை.
மேலும் படிக்க:
Share your comments