புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் விவசாயிகள் திட்டமிட்டபடி டிராக்டர் பேரணியை தொடங்கினர். சிங்கு, திக்ரி எல்லைகளில் தடுப்புகளை உடைத்தெரிந்து டெல்லிக்குள் நுழைந்தனர்.
விவசாயிகள் போராட்டம்
பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் விளைபொருள் வர்த்தக சட்டம், விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்திரவாதம் அளிக்கும் சட்டம், அத்தியாவசிய பொருட்கள் திருத்தச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தோல்வியடையும் பேச்சுவார்த்தைகள்
இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் முற்றுகை போராட்டம் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு, விவசாய சங்கத் தலைவர்களுடன் 10 சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.
டிராக்டர் பேரணி
இதனிடையே விவசாயிகள் தங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தும் நடவடிக்கையாக குடியரசு தினத்தன்று (ஜனவரி 26)டெல்லியில் ஒரு லட்சம் டிராக்டர்கள் பங்கேற்கும் மாபெரும் பேரணி நடைபெறும் என அறிவித்தனர். அதன்படி, சிங்கு, டிக்ரி உள்ளிட்ட எல்லை பகுதிகளில் போலீசார் அமைத்த தடுப்பு அரண்களை உடைத்தெரிந்து விவசாயிகள் டெல்லிக்குள் நுழைந்தனர். சுமார் 30 கிமீ நீளத்திற்கும் அதிகமாக இந்த பேரணி இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சாலைகளில் ஒரு புறம் டிராக்டர்கள் அணிவகுப்பும், மறுபுறம் விவசாயிகள் நடந்தும் செல்கின்றனர்.
இது கடைசி நாள் அல்ல
இந்தப் பேரணியின்போது விவசாயிகள் அமைதியைக் கடைபிடிக்கவேண்டும் என விவசாயிகள் அமைப்பினர் விவசாயிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், இது போராட்டத்தின் கடைசி நாளல்ல என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்றும், விஷமிகள் ஊடுருவி பேரணிக்கு கெட்ட பேரை ஏற்படுத்தலாம் எனவும் அறிவுரைகளை வழங்கியுள்ளனர்.
மேலும் படிக்க
தை பிறந்தால் வழி பிறக்கும் - இந்த தை பட்டத்திற்கான பயிர்கள் விபரம்!
அறிமுகம் செய்யப்பட்டது டிஜிட்டல் வாக்காளர் அட்டை !!
வேலையில்லாதவருக்கு அரசின் உதவித்தொகை! விண்ணப்பிக்க கடைசி தேதி ஜனவரி 31
Share your comments