மக்காச்சோளத்தி புதுவித வீரியத்தை உதய்பூர் வேளாண்பல்கலைக்கழகம் அறிமுகம் செய்துள்ளது. இதற்காக தனியார் விதை உற்பத்தி நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த புதியவகை மக்காசோளம் ஒரு ஹெக்டேருக்கு 62-65 குவிண்டால் வரை உற்பத்தியை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்காசோளம் (Maize) விளைச்சல் உலகளவில் மிகப் பெரும் அளவில் நடைபெறுகிறது. குறிப்பாக, இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகளில் முக்கியமான பயிராக வளர்க்கப்படுகிறது. இந்தியாவில் நெல் மற்றும் கோதுமைக்கு அடுத்ததாக மக்காசோள உற்பத்தி மூன்றாவது இடத்தில் உள்ளது
இந்தியாவில் மக்காசோள விளைச்சல்:
பயிரிடப்படும் மாநிலங்கள்: கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திர பிரதேசம், தமிழ் நாடு, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மக்காசோளம் பரவலாக பயிரிடப்படுகிறது.
பயிரிடும் பருவம்: மக்காசோளத்தை மூன்று முக்கிய பருவங்களில் பயிரிடுகிறார்கள்:
கார் பருவம் (ஜூன் - செப்டம்பர்)
ரபி பருவம் (அக்டோபர் - மார்ச்)
கோடை பருவம் (மார்ச் - மே)
விவசாய தொழில்நுட்பங்கள்: புதிய கலப்பு விதை வகைகள், தண்ணீர் மேலாண்மை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் ஆகியவற்றின் மூலம் விளைச்சல் அளவை மேம்படுத்தி வருகின்றனர்.
விளைச்சல் சவால்கள்: மழை அடிப்படையிலான விவசாயம், பூச்சிக்கொல்லிகள் தாக்கம், நவீன தொழில்நுட்ப பயன்பாட்டின் குறைபாடு போன்றவை மக்காசோள விளைச்சலில் சவால்களை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில், மக்காச்சோளத்தில் அதிக உற்பத்தி தரும் 'பிரதாப் சங்கரா மக்கா-6' என்ற ஹைபிரின் வீரிய விதை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது, இந்தியாவில் நவீன விவசாயத்தில் பயன்படுத்தப்படும் ஒரு உயர் விளைச்சல் மக்காசோள (maize) வகை ஆகும். இது மேம்பட்ட வகையாகவும், அதிக மகசூல் அளிக்கக் கூடியதாகவும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இதை விவசாயிகள் பயிரிடுகின்றனர்.
உதய்ப்பூரைச் சேர்ந்த மஹாராணா பிரதாப் வேளாண் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் 'பிரதாப் சங்கரா மக்கா-6' என்ற ஹைபிரிட் வகை மக்காச்சோளத்தின் உற்பத்திக்காக ஆறு விதை நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
குஜராத்தை சேர்ந்த இந்தோ யு.எஸ் பயோடெக் (Indo US Biotech), ஆந்திராவை சேர்ந்த சக்ரா சீட்ஸ்(Charkra Seeds), சம்பூர்ணா சீட்ஸ்(Sampurna Seeda), ஸ்ரீ லக்ஷமி வெங்கடேஸ்வரா சீட்ஸ்(Sri Lakshmi Venkateshwara Seeds), முரளிதர் சீட்ஸ் கார்பரேசன்(Muralidhar Seeds Corporation, தெலுங்கானாவை சேர்ந்த மஹாங்கலேஷ்வரா அக்ரிடெக் ஆகிய ஆறு நிறுவனங்களுடன் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
ஒரு ஹெக்டேருக்கு 62-65 குவிண்டால் உற்பத்தி
பிரதாப் சங்கரா மக்கா-6 விதை குறித்து உதய்பூர் வேளாண் பல்கலை துணை வேந்தர் டாக்டர். அஜித் குமார் கூறுகையில், இவ்வகை விதைகள் மூலம் ஒரு ஹெக்டேருக்கு 62 முதல் 65 குவிண்டால் வரை மக்காச்சோள உற்பத்தி செய்ய முடியும் என்றும், வளம்மிக்க இடங்களில் மேலும் அதிக மகசூல் ஈட்ட முடியும் என்றும் தெரிவித்தார். ஸ்டார்ச் உற்பத்தி மற்றும் எத்தனால் உற்பத்தி ஆகியவற்றில் மக்காச்சோளத்தின் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், அதிக உற்பத்தி கைகொடுக்கும் என்றும் தெரிவித்தார்.
தானியமும் தீவனமும்
பிரதாப் சங்கரா மக்கா-6 விதை மூலம் கிடைக்கும் மக்காச்சோளத்தை தானியமாகவும், கால்நடைத் தீவனமாகவும் பயன்படுத்த முடியும். ஒரு குவிண்டால் மக்காச்சோள விதைகளை ரூ.40 ஆயிரத்திற்கு விநியோகிக்கும் உதய்பூர் பல்கலை, அதற்கு ஈடாக நிறுவனங்களிடமிருந்து 2.5 லட்ச ரூபாயும், 4 % சதவீதம் காப்புரிமை தொகையும் பெறுகிறது.
அதிகரிக்கும் எத்தனால் பயன்பாடு
நாம் அன்றாடம் பயன்படுத்தும் எரிபொருட்களான பெட்ரோல் மற்றும் டீசலுடன் எத்தனால் கலக்கப்பட்டு, பசுமை எரிபொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. எத்தனால் தான் இனிவரும் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் பசுமை எரிபொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனால் தயாரிக்க மக்காச்சோளம் முக்கிய மூலப்பொருள் என்பது குறிப்பிடத்தக்கது.
4 மாநிலங்களில் பயிரிட ஒப்புதல்
பிரதாப் சங்கரா மக்கா-6 வகை விதைகள் குறித்து, விதைகள் ஆராய்ச்சி இயக்குனர் அரவிந்த் வர்மா கூறுகையில், இந்த விதைகள் நாடு முழுவதும் 22 மையங்களில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டுள்ளது. அனைத்து சோதனைகளிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்தியது என்றார். மேலும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், குஜராத் ஆகிய மாநிலங்களில் பிரதாப் சங்கரா மக்கா-6 வகை மக்காச்சோள விதைகளை பயிரிட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
நோய் எதிர்ப்பு திறன் அதிகம்
உதய்பூர் வேளாண் கல்லூரி டீன் பேராசிரியர் ஆர்.பி.துபே, பிரதாப் சங்கரா மக்கா-6 வகை விதை குறித்து பேசுகையில், இந்த விதைகள் நீர்ப்பாசனம் இல்லாத பகுதிகளிலும் செழித்து வளரும் என்றும், தண்டு அழுகல், நூற்புழுக்கள் மற்றும் தண்டு துளைப்பான் போன்ற நோய்களால் எளிதில் பாதிக்கப்படாது என்றும் தெரிவித்தார்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு ஐடியா
பெட்ரோல், டீசலுக்கு மாற்றாக எத்தனால் போன்ற உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரிப்பதற்காக, பயிர் உற்பத்தியை பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் இதுபோன்று மற்ற நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து மக்காச்சோள உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Read more:
நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்!
ரூ.13,966 கோடியில் விவசாயிகளுக்காக 7 திட்டங்கள்- அமைச்சரவை ஒப்புதல்!
Share your comments