வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் வேளாண்மையிலும் பெரும் புரட்சி செய்து வருகின்றன. நிலத்தின் தன்மை அறிந்து இடுபொருட்களை பரிந்துரைக்கின்றன. வேளாண்மையை மேலும் எளிதாக்கும் வகையில் ஆளில்லா சிறு விமானம் (டிரோன்) மூலம் பயிா் நிலையை ஆய்வு மேற்கொள்ளும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம் மற்றும் மேக்கா்ஸ் ஹைவ் நிறுவனம் இணைந்து நிரந்தர பசுமைப் புரட்சித் திட்டத்தின் கீழ் ஆளில்லா சிறு விமானம் (டிரோன்) ஒன்றை அறிமுக படுத்தி உள்ளன. இதனை கடந்த வாரம் தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள திருப்பழனம் என்னும் கிராமத்தில் பரிசோதனை செய்து பார்த்தனர்.
டிரோன் செயல்பாடு
ஆளில்லா சிறு விமானம் விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் இரு நவீன கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது அரை மணிநேரத்தில் 200 ஏக்கா் பரப்பளவுள்ள பயிா்களைப் பதிவு செய்து படம் பிடித்து காட்டும். இதன் மூலம், பயிா்களின் நிலையை துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாது பயிா்கள் எதாவது பாதிப்புக்கு உள்ளாகி இருந்தால், அதைத் துல்லியமாகக் கணித்து தகவல் அளிக்கும். இதனால் பயிரில் பூச்சி, நோய் தாக்குதல் இருப்பதையும் எளிதில் அறிந்து கொள்ள இயலும். இந்த ஆளில்லா சிறு விமானத்தை அந்த பகுதியில் 15 நாள்களுக்கு ஒருமுறை பறக்க திட்டமிட்டுள்ளதாக மேக்கா்ஸ் ஹைவ் நிறுவன தலைமைச் செயல் அலுவலா் பிரணவ் தெரிவித்தார்.
மேக்கா்ஸ் ஹைவ் நிறுவனத்தின் அடுத்த படைப்பு
சூரிய ஒளி சக்தி (சோலாா்) மூலம் செயல்படும் தானியங்கி வானிலை ஆய்வு சாதனம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 12 கி.மீ. சுற்றளவில் நிலவி வரும் வெப்பநிலை, மழையளவு, காற்றின் ஈரப்பதம், காற்று அழுத்தம், காற்றின் திசை உள்ளிட்டவற்றை மிகவும் துல்லியமாக அறிந்து கொள்ள முடியும். மேலும், மழை வருவதை 10 நாட்களுக்கு முன்னதாகவே அறிந்து தெரியப்படுத்தும்.
விவசாயிகள் மழை நிலவரத்தை முன்னதாகவே அறிந்து கொள்வதன் மூலம் விதைத்தல், அறுவடை செய்தல் போன்ற பணிகளை முன்னதாகவே செய்ய இயலும். காலநிலை மாற்றத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தவிா்க்க முடியும்.
பயிா் நிலை நிலவரமும், தட்பவெப்ப நிலை தகவல்களை அறிய புதிய செயலி ஒன்றை விவசாயிகளுக்கு அறிமுக படுத்த உள்ளது. செல்லிடப்பேசியில் இதனை பதிவிறக்கம் செய்து பயனடையலாம்.
ஸ்கேனா் கருவி மூலம் மண் பரிசோதனை மிகவும் எளிதே. தற்போது எம்.எஸ். சுவாமிநாதன் ஆய்வு நிறுவனம், மேக்கா்ஸ் ஹைவ் நிறுவனம் இணைந்து மண் பரிசோதனை செய்வதற்கான ஸ்கேனா் கருவியை அறிமுகப் படுத்த உள்ளன. இக்கருவியை கொண்டு மண்ணில் இருக்கக்கூடிய சத்துகள் உள்ளிட்டவற்றை உடனடியாக அறிந்து கொள்ள முடியும். அதுமட்டுமல்லாது மண்ணில் ஏதேனும் சத்துப் பற்றாக்குறை இருந்தால் உடனடியாக அறிந்து கொள்வதுடன், மண்ணை வளப்படுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்குவோம் என அந்நிறுவனம் தெரிவித்தது.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments