மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்க கூடிய 27 வகையான பூச்சிக் கொல்லிகளைத் தடை செய்வதற்கான வரைவை ஒன்றை மத்திய வேளாண் துறை அமைச்சகம் மற்றும் விவசாய நலத்துறை (Union Ministry of Agriculture and Farmer’s Welfare) வெளியிட்டுள்ளது. இது குறித்த கருத்துகள் மற்றும் மாற்று கருத்துகள் ஏதேனும் இருப்பின் 45 நாட்களுக்குள் தெரிவிக்காலம் என அறிவித்துள்ளது.
நாட்டில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவு உற்பத்தியையும், உணவு பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது வேளாண் துறை. அதே நேரத்தில் வேளாண் நிலங்களில் பயன்படுத்தும் வீரியம் மிக்க பூச்சிக்கொல்லிகளால் விவசாயிகளின் உடல் நலமும், நன்மை செய்யும் பூச்சிகளும் அதிக அளவில் பாதிக்கப் படுகின்றன. வறட்சி நிறைந்த கோடையில் வெட்டுக்கிளிகள் (locust) உள்ளிட்ட பல்வேறு பூச்சிகள் பயிர்களின் வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாகவும், பெரும் சேதத்தையும் உண்டாக்கி விடுகின்றது.
பூச்சிக்கொல்லி பயன்படுத்துவதன் நோக்கம்
பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்துவதன் முக்கிய நோக்கம் தீமை பூச்சிக்களை கட்டுப்படுத்தி பயிர்களின் வளர்ச்சியை ஊக்கப் படுத்துவதே ஆகும். ஆனால் பெரும்பாலான பூச்சிக்கொல்லி நிறுவனங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக நச்சுதன்மை வாய்ந்த இரசாயனங்களை பயன்படுத்தி பூச்சிக்கொல்லிகளை தயாரிக்கின்றனர். வேளாண் நிலங்களில் இவற்றை தொடர்ந்து பயன்படுத்தும் போது நிலத்தின் வளம் குன்றுவதுடன், தாவர வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் பிற பூச்சியினங்கள், தேனீக்கள், எலிகள், பறவைகள் என அனைத்தும் பாதிக்கப்படுகிறது.
உயிர்க்கொல்லியான பூச்சிக்கொல்லிகள்
வீரியம் மிக்க உயிர்க்கொல்லியான பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தி விளைவிக்கப்படும் உணவு பொருட்களை மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும் மற்றும் பிற உயிரினங்களும் உண்பதால் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டு இறுதியில் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மனிதனையும், நிலத்தையும் மலடாக்கும் பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என வேளாண் ஆர்வலர்கள் பலர் கோரிக்கை வைத்ததன் பயனாக அதிக நச்சுத்தன்மை கொண்ட பூச்சிக்கொல்லிகளுக்கு தடை விதிக்க வேளாண் அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள்
உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட உயிருக்கு ஆபத்தை தரும் பூச்சிக்கொல்லிகளுக்கு இந்தியாவிலும் தடை விதிக்கப்பட்டது. கடந்த 2013 ஆம் ஆண்டு இது குறித்த விரிவான ஆய்வறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த குழுவில் இடம் பெற்ற வேளாண் வல்லுநர்கள் 66 வகையான பூச்சிக்கொல்லி மருந்துகளை பரிந்துரைத்ததுடன், தடை செய்யப்பட்ட நாடுகளின் விவரங்களையும் சமர்ப்பித்தது. அதைத்தொடர்ந்து, கடந்த 2018இல் நச்சு தன்மை மிகுந்த 18 பூச்சிக்கொல்லிகளை தடை விதித்துடன் இறக்குமதி செய்பவர்கள், விற்பவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கவும் மத்திய அரசு உத்தரவிட்டது.
பெனோமில் ( Benomy ), கார்பரில் (Carbary), டியாஜினோன் (Diazinon), பெனாரிமோல் (Fenarimol), பென்தியோன் (Fenthion), லினுரோன் (Linuron) , மெதோக்சி (Methoxy), எதில் மெர்குரி குளோரைடு (Ethyl Mercury Chloride), மெதில் பராதியோன் (Methyl Parathion), சோடியம் சியானிட் (Sodium Cyanide), தியோமெடோன் (Thiometon), திரிமோர்ப் (Tridemorph), அலக்ளோர் (Alachlor), திகுளோர்வோஸ் (Dichlorvos),போரேட் (Phorate), பாஸ்பாமிதோன் (Phosphamidon), திரியஜோபோஸ் (Triazophos), திரிகுளோர்போன் (Trichlorfon) ஆகிய18 பூச்சி கொல்லி மருந்துகள் தடை செய்துள்ளது.
தடை விதிப்பதற்கான வரைவு
இதன் தொடர்ச்சியாக தற்போது மேலும் 27 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு தடை விதிப்பதற்கான வரைவு உத்தரவை வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் கடந்த திங்கள்கிழமை அன்று வெளியிட்டது. இது குறித்த கருத்துக்கள் மற்றும் எதிர்ப்புகள் ஏதாவது இருத்தால் 45 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும். அதன் பின்னர் வேளாண் துறை சார்ந்த வல்லுனர்களுடன் கலந்தாலோசித்து இறுதி உத்தரவு வரும் ஜூலை மாதம் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூச்சிக்கொல்லிகளின் விவரம்
வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் தற்போது தடை விதித்துள்ள பூச்சிக்கொல்லிகளின் விவரம்
அசிபேட் (Acephate)
அல்ட்ராசின் (Altrazine)
பென்ஃபுரகார்ப்(Benfuracarb)
புட்டாச்ச்கோர் (Butachkor)
கேப்டன் (Captan)
கார்பென்டெசிம் (Carbendezim)
கார்போபுரம்(Carbofuram)
குளோர்பைரிபோஸ் (Chlorpyriphos)
2,4 டி (2,4D)
டெல்டாமேத்ரின் (Deltamethrin)
டிகோபோல் (Dicofol)
டைம்தோயேட் (Dimethoate
டைனோகாப் (Dinocap)
டியூரான் (Diuron)
மாலதியான் (Malathion)
மான்கோசெப் (Mancozeb)
மெத்தோமில் (Methomyl)
மோனோக்ரோடோபாஸ் (Monocrotophos)
ஆக்ஸிஃப்ளூர்பென் (Oxyfluorfen)
பெண்டிமெதலின் (Pendimethalin)
குயினல்போஸ் (Quinalphos)
சல்போசல்பூரோன் (Sulfosulfuron)
தீரம் (Thiram)
தியோபனாட் எமதில் (Thiophanat emethyl)
தியோடிகார்ப் (Thiodicarb)
ஜினெப் (Zineb)
ஸிராப் (Zirab)
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பூச்சிக்கொல்லிகளில் அசிபேட் (Acephate) என்ற பூச்சிக்கொல்லி மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் தேனீகளுக்கு மிகுந்த ஆபத்தாக கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அசிபேட் என்ற பூச்சிக்கொல்லி மருந்துக்கு 32 நாடுகள் தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- அதே போன்று பென்ஃபுரகார்ப்(Benfuracarb) பூச்சிக்கொல்லியும் 28 நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது . பென்ஃபுரகார்ப்(Benfuracarb) பூச்சிக்கொல்லியானது ஐரோப்பிய ஒன்றியத்தால் அங்கீகரிக்கப்படவில்லை.
- இதேபோன்று டியூரான் (Diuron) மாலதியான் (Malathion) ஜினெப் (Zineb) ஸிராப் (Zirab) ஆகிய பூச்சிக்கொல்லி மருந்துகளில் அளவுக்கு அதிகமான நச்சு தன்மை இருப்பது கன்டறியப்பட்டுள்ளது .
- அல்ட்ராசின் (Altrazine) பூச்சிக் கொல்லியால் மீன் மற்றும் பிற நீர்வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது என தெரியவந்துள்ளது.
இறக்குமதி, உற்பத்தி, விற்பனைக்கு தடை
தற்போது தடை செய்யப்பட்டுள்ள 27 பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கும் வருகிற ஜூலை மாதம் இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படவுள்ளது. அதன் பிறகு இந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் இந்தியாவில் இறக்குமதி செய்யவோ, உற்பத்தி செய்யவோ, விற்பனை செய்யவோ அனுமதிக்கப் படமாட்டாது.
தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகளின் புள்ளி விவரங்கள்
- இது வரை இந்தியாவில் பயன்பாட்டில் இருந்து வந்த 44 பூச்சிக்கொல்லிகளுக்கு இறக்குமதி, உற்பத்தி மற்றும் பயன்பாட்டிற்கான தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- 8 பூச்சிக்கொல்லி மருந்துகள் அங்கிகரிக்கப்பட்ட வேளாண் ரசாயனங்கள் என்ற பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
- ஒன்பது பூச்சிக்கொல்லிகள் நாட்டில் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
- இரண்டு பூச்சிக்கொல்லி மருந்துகள் உற்பத்திக்கும் ஏற்றுமதிக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
- உள்நாட்டில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது.
- ஆறு புச்சிக்கொல்லி மருந்துகள் வரும் டிசம்பர் மாதம் இறுதிக்குள் படிப்படியாக அகற்றப்படவுள்ளது.
மத்திய அரசின் இந்த தடை உத்தரவுக்கு பல்வேறு வேளாண் ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த தடை காரணமாக பூச்சிக்கொல்லி உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
Daisy Rose Mary
Krishi Jagran
Share your comments