இந்திய விண்வெளி துறையில் மறக்க முடியாத நாளாக ஆக.23 ஆம் தேதி மாறியுள்ளது. நிலவு குறித்த ஆய்வில் ஈடுபட்ட இந்தியா தனது மூன்றாவது முயற்சியில் (சந்திராயன் திட்டம்) புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. வெற்றிக்கரமாக நிலவின் தென் துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிறங்கி சாதனை புரிந்துள்ளது.
இந்தியா மட்டுமின்றி உலகின் வல்லரசு நாடுகளின் கவனமும் இஸ்ரோவின் சந்திராயன்-3 திட்டத்தினை நோக்கி திரும்பியுள்ளது. 2019 ஆம் ஆண்டில், இஸ்ரோ சந்திராயன் -2 ஐ நிலவின் தென் துருவத்தில் இறக்க முயற்சித்தது. ஆனால் அந்த நேரத்தில் சில தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக, விண்கலத்தின் லேண்டர் தரையிறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளானது.
அதே தவறுகளை மீண்டும் செய்யாமல், இஸ்ரோ விஞ்ஞானிகள் சந்திரயான்-3 விண்கலத்தின் தொழில்நுட்பத்தை மறுவடிவமைப்பு செய்தனர். அதனைத் தொடர்ந்தu இஸ்ரோ, சந்திரயான் -3 ஐ ஜூலை 14 அன்று விண்ணில் ஏவியது, பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பின்னர் இன்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
ஏற்கெனவே குறிப்பிட்டது போல் மாலை 5.30 மணிக்கு லேண்டரை தரையிரக்கும் பணியினை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடங்கினர். லேண்டரின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டும், அதன் நிலை செங்குத்தாக மெல்ல மெல்ல மாறி சரியாக 6.02 மணிக்கு வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் தரையிரக்கப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென் துருவத்தில் தடம் பதித்த முதல் நாடு என்கிற பெருமையினை பெற்றது.
லேண்டர் மெதுவாக தரையிறங்கிய பிறகு, ரோவர் லேண்டரிலிருந்து சந்திரனின் மேற்பரப்பில், அதன் பக்க பேனல்களில் ஒன்றைப் பயன்படுத்தி இறங்கும். இது தொடங்குவதற்கு சுமார் ஒரு தரையிறங்கிய நொடியிலிருந்து சுமார் 2 மணி நேரம் ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இரண்டும் வெற்றிக்கரமாக தரையிறங்கிய புகைப்படத்தை இஸ்ரோவுடன் பகிர்ந்தப்பின் அடுத்த 14 நாட்களுக்கு லேண்டர் மற்றும் ரோவர் இரண்டும் நிலவு குறித்து நாம் அறிந்திராத பல தகவல்களை சேகரித்து நமக்கு அனுப்பும். இது நிலவு குறித்த ஆராய்ச்சியில் மிகப்பெரும் முன்னெடுப்பை தொடங்கி வைக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
இந்த நிகழ்வினை காணொளி வாயிலாக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் இருந்து கலந்துக் கொண்டார். வெற்றிக்கரமாக தரையிறங்கிய நிலையில், பிரதமர் மோடி இந்திய கொடியசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர், காணொளி வாயிலாக உரையாற்றிய பிரதமர், ”சந்திரயான் 3 வெற்றி இந்தியாவுக்கு மட்டுமல்ல; ஒட்டுமொத்த மனித குலத்திற்கும் சொந்தமானது” எனக் கூறிப்பிட்டு இஸ்ரோ விஞ்ஞானிகளையும் வாழ்த்தி பேசினார்.
நிலவின் தென்துருவ வரலாற்றுபூர்வ #சந்திரயான்3 பயணத்தை வெற்றிகரமாக்கிய நமது விஞ்ஞானிகளால் ஒட்டுமொத்த தேசமும் வெளிநாடுவாழ் இந்திய சமூகமும் பெருமிதம் கொள்கின்றன. தலைசிறந்த விண்வெளி நாடுகளின் போட்டிக்குள் இந்தியாவை சேர்த்த இஸ்ரோ குழுவுக்கு வாழ்த்துக்கள். இதுதான் தடுக்க முடியா இந்தியா என தமிழ்நாடு ஆளுநர் மாளிகை செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் காண்க:
Chandrayaan 3: அந்த கடைசி 20 நிமிஷம் தான் ரொம்ப முக்கியம்- ஏன்?
HPCL நிறுவனத்தில் 276 காலிப்பணியிடம்- ஆரம்ப சம்பளமே இம்புட்டா?
Share your comments