டில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தில் இரு விவசாய சங்கங்கள் வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளன. நேற்று குடியரசு தினத்தன்று, விவசாயிகள் நடத்திய டிராக்டர் பேரணியில் (Tractor Rally) வன்முறை நடந்ததையடுத்து, விவசாய சங்கங்கள் இம்முடிவை எடுத்துள்ளது.
டிராக்டர் பேரணி
மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களுக்கு (Agricultural Laws) எதிராக டில்லி எல்லையில், 40க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் பல நாட்களாக போராடி வருகின்றன. வேளாண் சட்டங்களை நிரந்தரமாக நீக்கு வேண்டும் என்பதே விவசாயிகளின் நோக்கம். மத்திய அரசுடன் நடந்த பல கட்ட பேச்சுவார்த்தைகளில் எந்தவித தீர்வும் கிடைக்காதலால், குடியரசு தினமான நேற்று (ஜனவரி 26) டில்லியில் டிராக்டர் பேரணியை (tractor rally) விவசாயிகள் நடத்தினர். இதில், போலீசார் அனுமதிக்காத பகுதிகளிலும் சில விவசாயிகள் பேரணியை நடத்தினர். போலீசாரின் தடுப்புகளை தகர்த்து பேரணியை தொடர்ந்தனர். இந்த பேரணியில் திடீரென வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர்.
இரு விவசாய சங்கங்கள் வாபஸ்
விவசாயிகள், போலீசாருக்கு இடையே நடந்த வன்முறையில் 300க்கும் மேற்பட்ட போலீசார் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக 200 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக டில்லி போலீசார் தெரிவித்தனர். இந்நிலையில், வேளாண் சட்டங்களுக்கு எதிரான தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ராஷ்டிரிய கிசான் மஜ்தூர் சங்கம் (Rashtriya Kisan Mazdoor Sangam) மற்றும் பாரதிய கிசான் யூனியன் (Bharatiya Kisan Union) ஆகிய விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
நான் உட்பட, ராஷ்டிரிய கிசான் மஜ்தூர் சங்கம் இந்த போராட்டத்திலிருந்து இப்போதே விலகிக் கொள்கிறது. வேளாண் சட்டங்கள் தொடர்பான கோரிக்கைகள் நிறைவேறும் வரை எங்களின் எதிர்ப்பு தொடரும். மக்களை தியாகம் செய்யவோ அல்லது அடிக்கவோ நாங்கள் இங்கு வரவில்லை. வன்முறை போராட்டங்கள் எங்களுக்கு ஏற்புடையது அல்ல என்று ராஷ்டிரிய கிசான் மஜ்தூர் சங்கத்தின் தலைவரான வி.எம்.சிங் (V.M. Singh) கூறினார்.
இதனைத்தொடர்ந்து, பாரதிய கிசான் யூனியனும் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது. '58 நாட்கள் நடந்த போராட்டம் நேற்று நடந்த வன்முறையால் முடிவுக்கு வந்தது வேதனையளிக்கிறது,' என்று சங்கத்தின் தலைவர் தாகூர் பானு பிரதாப் சிங் (Tagore Banu Pratap Singh) கூறினார்.
விவசாயிகள் நடத்திய அமைதிப் போராட்டத்தில், திடீரென வன்முறை நிகழ்ந்ததை யாரும் எதிர்ப்பார்க்கவில்லை. இரு விவசாய சங்கங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றதால், அடுத்து என்ன நிகழப் போகிறது, மத்திய அரசு விவசாயிகளுக்கு சாதகமான முடிவை எடுக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
டில்லியில் விவசாயிகள் டிராக்டர் பேரணி! அமைதியாக நடந்த விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை! 144 தடை உத்தரவு
பயிர்கள் சேதமடைந்து நஷ்டமடைந்த போதிலும், மாடுகளுக்கு தீவனம் அளிக்க அறுவடை செய்யும் விவசாயிகள்!
Share your comments