கொரோனா மூன்றாவது அலை இந்த மாதம் துவங்கி, வரும் அக்டோபரில் உச்சத்தை எட்டும். தினமும் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் வைரசால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது' என, ஐ.ஐ.டி., (IIT) எனப்படும், இந்திய உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இரண்டாம் அலை
உலகம் முழுதும் கடந்த 20 மாதங்களாக கொரோனா தொற்று ஆட்டிப் படைத்து வருகிறது. நம் நாட்டில் கொரோனா முதல் அலை கடந்தாண்டு மார்ச்சில் துவங்கி, அக்டோபர் வரை அதிகமாக இருந்தது. இதன்பின் படிப்படியாக குறையத் துவங்கியது. இதனால், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாமல் மக்கள் அலட்சியம் காட்டினர். இதன் விளைவாக, இந்தாண்டு மார்ச்சில் இரண்டாவது அலை (Second Wave) பரவத் துவங்கியது.
ஏப்ரல் மற்றும் மே மாதம் 7 வரை பாதிப்பு அதிகமாக இருந்தது. தினசரி பாதிப்பு நான்கு லட்சத்தை கடந்தது. இதன்பின் பாதிப்பு படிப்படியாக குறைந்தது. எனினும், 'கொரோனா மூன்றாவது அலை பரவும் அபாயம் உள்ளது' என, டாக்டர்கள் மற்றும் சுகாதாரத் துறை நிபுணர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இதை உறுதி செய்வது போல், வேகமாக குறைந்து வந்த தொற்று பாதிப்பு, கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மதுகுமளி வித்யாசாகர், உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் மநீந்திரா அகர்வால் ஆகியோர், கணித முறை அடிப்படையில் கொரோனா மூன்றாவது அலையை (Third Wave) கணித்துள்ளனர். இந்த இரண்டு ஆராய்ச்சியாளர்களுமே இரண்டாவது அலையில் ஏற்படும் பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து, ஆய்வு அறிக்கை வெளியிட்டனர். அவர்கள் குறிப்பிட்டிருந்தது சரியாக இருந்தது.
மூன்றாவது அலை
இந்நிலையில், மூன்றாவது அலை குறித்து அவர்கள் கூறியதாவது: கேரளா, மஹாராஷ்டிராவில் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், மூன்றாவது அலை பரவல் அடுத்த சில நாட்களில் துவங்கும் என தெரிகிறது. எங்கள் கணிப்பின்படி ஆகஸ்ட் மாதத்தில் பரவும் மூன்றாவது அலை, அக்டோபரில் உச்சத்தை அடையும். ஆனாலும் இரண்டாவது அலையைப் போல் மூன்றாவது அலையில் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகம் இருக்காது.
இரண்டாவது அலையில் தினசரி பாதிப்பு நான்கு லட்சத்தை கடந்தது. மூன்றாவது அலையில் தினசரி பாதிப்பு அதிகபட்சமாக, 1.50 லட்சத்துக்குள் தான் இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
மூன்றாவது அலை பாதிப்பை தடுப்பதில் தடுப்பூசிக்கு (Vaccine) முக்கிய பங்கு உள்ளது. அதனால், தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்தினால் மூன்றாவது அலை பாதிப்பை நிச்சயம் குறைக்க முடியும்.
அலட்சியம் வேண்டாம்!
மூன்றாவது அலை பரவல் குறித்து சுகாதாரத் துறை நிபுணர்கள் கூறியதாவது: முதல் அலையின் பரவல் குறைந்ததும், இனி கொரோனா பாதிப்பு இல்லை என்ற எண்ணம் மக்களிடம் ஏற்பட்டது. கொரோனா தடுப்பில் அவர்கள் காட்டிய அலட்சியம் தான், இரண்டாவது அலைக்கு வழிவகுத்தது. இரண்டாவது அலை பரவல் குறைந்த பின், அதே தவறுகளை மக்கள் மீண்டும் செய்யத் துவங்கியுள்ளது கவலையளிக்கிறது. முக கவசம் (Face mask) அணிதல், கிருமி நாசினியால் கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல், கூட்டம் கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடைமுறைகளை மக்கள் இன்னும் குறைந்தது ஓராண்டுக்காவது முழுமையாக பின்பற்ற வேண்டும்.
உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அப்போது தான் மூன்றாவது அலை பாதிப்பிலிருந்து தப்பிக்க முடியும். மத்திய சுகாதாரத் துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், 'கொரோனா பரவல் அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பு நடவடிக்கைகளை மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் அதிகப்படுத்த வேண்டும்' என்றனர்.
மேலும் படிக்க
வீடற்ற, மனநலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் வகையில் புதிய திட்டம்!
100% மக்களுக்கும் தடுப்பூசி செலுத்திய முதல் இந்திய நகரமானது புவனேஷ்வர்!
Share your comments