அஞ்சலக வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் அரசின் பல்வேறு திட்டங்களின் கீழ் பணப் பலன்களைப் பெறுகிறார்கள். ஆனால் இதில் மோசடி நடைபெறுவதும் பலர் ஏமாற்றப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள், பழங்குடியினர், கல்வியறிவு இல்லாதவர்களின் பெயர்களில் போலி கணக்குகளை தொடங்கி, மோசடி செய்பவர்களின் நடவடிக்கைகள் அதிகரித்து வருகிறது. இதனால் வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களது கணக்கு மற்றும் தனிப்பட்ட தகவல்களை தெரியாத நபர்களுக்கு பகிரும்போது கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கை (Warning)
இந்தக் கணக்குகள் உண்மையான கணக்கு வைத்திருப்பவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு இணையக் குற்றங்களில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றன என இந்திய அஞ்சலக வங்கி எச்சரித்துள்ளது. இந்திய அஞ்சலக வங்கி வாடிக்கையாளர்களுக்கு அளித்துள்ள கூடுதல் அறிவுரைகள் பின்வருமாறு:
- வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு வாடிக்கையாளர்கள் மூன்றாம் நபரின் மொபைல் எண்ணைப் பயன்படுத்தக் கூடாது.
- பரிவர்த்தனையின் உண்மைத்தன்மையை அறியாமல், எந்தப் பணத்தையும் ஏற்கவோ அல்லது அனுப்பவோ கூடாது.
- வாடிக்கையாளர்கள் தங்கள் சார்பாக பரிவர்த்தனை செய்வதற்காகத் தங்கள் மொபைல் வங்கி கணக்கு விவரங்களை அறியாத நபர்களுடன் பகிர்ந்து கொள்வதை தவிர்க்க வேண்டும்.
- வாடிக்கையாளர்கள் தங்கள் அஞ்சலக வங்கிக்கணக்கு விவரங்களை வேலைவாய்ப்பு தருவதாக கூறும் நபர்களுடன் அல்லது சமூக ஊடகங்கள் மூலம் எளிதாகப் பணம் சம்பாதிப்பதற்கான வாய்ப்பை வழங்கும் நபர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
- வாடிக்கையாளர்கள் பணத்தை அனுப்புவதற்கு முன்பாகவோ அல்லது பரிவர்த்தனை செய்வதற்கு முன்பாகவோ நிறுவனம் மற்றும் நபர்கள் குறித்து சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
அஞ்சலக வங்கி, கணக்கு துவங்கிய பின் வாடிக்கையாளர்களின் அடையாளத் தரவை அவ்வப்போது புதுப்பித்து வருகிறது. மேலும் இதுபோன்ற மோசடி செய்பவர்களால் தவறாகப் பயன்படுத்தப்படுவதிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காக அவர்களின் பரிவர்த்தனைகளும் கண்காணிக்கப்படுகின்றன.
வாடிக்கையாளர் சரிபார்ப்பு எனப்படும் கே.ஒய்.சி. வழிமுறையில் தான் நிறையப் பேர் ஏமாற்றப்படுகின்றன. இந்த கே.ஒய்.சி. நடைமுறையில் வாடிக்கையாளர்கள் யாருக்கும் வங்கி அதிகாரிகள் போன் செய்து வங்கிக் கணக்கு விவரங்களைக் கேட்பதில்லை. அவ்வாறு யாராவது கேட்டால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வங்கிக் கணக்கில் உள்ள பணம் அனைத்தும் காணாமல் போய்விடும்.
மேலும் படிக்க
கோவை இரயில் பயணிகளுக்கு நற்செய்தி: ரயில்வே அமைச்சரின் புதிய அறிவிப்பு!
Share your comments