வியாபாரிகள் வராததால் விளை நிலங்களிலேயே தர்ப்பூசணி அழுகி வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தர்ப்பூசணி
தமிழகத்தில் இந்த ஆண்டு பருவமழை போதிய அளவில் பெய்ததாலும், நிலத்தடி நீர் (Ground water) மூலமாகவும், பம்புசெட் என்ஜின் மூலமும், குளம், வாய்க்காலில் உள்ள நீர் மூலமும் நீர் பாய்ச்சி திருக்கடையூர் பகுதிகளில் பல ஏக்கர் மணல் திடல்களில் தர்ப்பூசணி சாகுபடி செய்து வந்தனர்.
இந்தநிலையில் திருக்கடையூர் விவசாயி ஆறுமுகம் கூறுகையில், மேற்கண்ட பகுதிகளில் நாங்கள் ஆண்டு தோறும் தர்ப்பூசணி சாகுபடி (Watermelon Cultivation) செய்து வருகிறோம். இந்த பயிர் 60 நாட்களில் நன்கு வளர்ந்து தற்போது அறுவடைக்கு தயார் நிலைக்கு வந்துவிட்டது. எனவே தற்போது தர்ப்பூசணி அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அறுவடை செய்த பழங்களை உள்ளூர் மற்றும் வெளியூரில் இருந்து வியாபாரிகள் வந்து வாங்கி செல்வது வழக்கம். இந்த ஆண்டு கோடை வெயில் அதிக அளவில் இருக்கும் என்பதால் தர்ப்பூசணி பயிர் அதிக அளவில் பயிரிட்டிருந்தோம்.
வீணாகும் தர்ப்பூசணி பழங்கள்
இந்தநிலையில் தற்போது கொரோனா வைரஸ் 2-வது அலை வேகமாக பரவி வருவதால் மத்திய, மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக வழிபாட்டு தலங்கள் மற்றும் சுற்றுலா பகுதிகளுக்கு பொதுமக்கள் வருவதற்கு தடை விதித்து பல்வேறு கட்டுபாடுகளை அரசு விதித்துள்ளது. இதனால் தர்ப்பூசணி வாங்க வரும் வியாபாரிகள் வருகை மிகவும் குறைந்து விட்டது. இதனால் விவசாயிகள் தர்ப்பூசணி பழங்களை அறுவடை செய்யாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் விளை நிலத்திலேயே தர்ப்பூசணி பழங்கள் அழுகி வீணாகி கிடக்கிறது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு உள்ளாகி உள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றார்.
மேலும் படிக்க
கடலூரில் அமோக விளைச்சலைத் தரும் கோழிக்கொண்டைப் பூ சாகுபடி!
பிளாஸ்டிக்குக்கு மாற்றாக பனை ஓலை பெட்டி! வியாபாரிகள் ஆர்வம்!
Share your comments