Water Bodies
தொடர்மழை மற்றும் வைகை தண்ணீர் திறப்பு காரணமாக திருமங்கலம் தாலுகாவில் உள்ள பொன்னமங்கலம் கண்மாய் மற்றும் மேலேந்தல் கண்மாய்கள் நிரம்பியுள்ளதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருமங்கலம் தாலுகாவில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வந்தது. இதனால், கண்மாய்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து வந்தது. இந்நிலையில், மழை மற்றும் வைகையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் தாலுகாவில் உள்ள பொன்னமங்கலம் பெரியகுளம் கண்மாய் நிரம்பி மறுகால் பாயத் தொடங்கியுள்ளது.
பொன்னமங்கலம் கிராமத்திற்கு அருகே உள்ள ஜோதிமாணிக்கம் கண்மாய் நிரம்பி உபரிநீர் கால்வாய் வழியாக கடந்த ஒருவார காலமாக பொன்னமங்கலம் கண்மாய்க்கு வந்து கொண்டிருந்தது. இதனால், நேற்று முன்தினம் கண்மாய் முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. தொடர்ந்து கண்மாய் உபரிநீர் கண்மாயின் கிழக்குப்பகுதி வழியாக மறுகால் பாய்ந்து வெளியேறி, அருகேயுள்ள ஜோசியர் ஆலங்குளம் கண்மாய்க்கு செல்லத் துவங்கியுள்ளது.
மேலேந்தல் கண்மாயும் நிரம்பியது:பொன்னமங்கலம் கிராமம் அருகே உள்ள மேலேந்தல் கண்மாயும் நிரம்பி வழிகிறது. இந்த கண்மாய்க்கு பொன்னமங்கலம் கண்மாயின் மேற்கு பகுதியில் உள்ள மறுகால் மூலமாக வெளியேறும் நீர் வருவதால் மேலேந்தல் கண்மாயும் நேற்று நிரம்பியது. இந்த கண்மாயின் உபரிநீர் மறுகால் வழியாக உரப்பனூர் கண்மாய்க்கு செல்கிறது. இது தவிர பொன்னமங்கலத்தை அடுத்துள்ள திருமங்கலம் தாலுகாவின் கடைசி எல்லை கிராமமான வாகைக்குளம் கண்மாயும் நிரம்பியுள்ளது.
திருமங்கலம் பகுதியில் அடுத்தடுத்துள்ள கண்மாய்கள் நிரம்பி வருவதால், கண்மாய்கரைகளை கண்காணித்து வரும்படி பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை மற்றும் பஞ்சாயத்து தலைவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலமாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. தாலுகாவில் கண்மாய்கள் தொடர்ந்து நிரம்பி வருவதால், திருமங்கலம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்தாண்டும் பெய்த மழையால் பல்வேறு கண்மாய்கள் நிரம்பியதால் திருமங்கலம் பகுதியில் விவசாயம் அதிகளவில் நடைபெற்றது. அதே போல் இந்தாண்டும் கண்மாய்கள் நிரம்பி வருவதால் நெல், கரும்பு, சோளம், மக்காசோளம், பருத்தி பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மேலும் படிக்க
நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவு 19 சதவீதமாக அதிகரிப்பு: மத்திய அரசு அறிவிப்பு!
Share your comments