குறுவை பாசனத்திற்காக, மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று அதிகாலை கல்லணை வந்தடைந்தது. இதைத்தொடர்ந்து டெல்டா பாசனத்திற்காக கல்லணையிலிருந்தும் தண்ணீர் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கல்லணைக்கு வந்த நீர்
காவிரி டெல்டா குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையை கடந்த 12-ந்தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் இன்று (புதன்கிழமை) அதிகாலை திருச்சி மாவட்டம் கல்லணையை வந்தடைது.
கல்லணை திறப்பு
இதைத்தொடர்ந்து, கல்லணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மா.சுப்ரமணியன், கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, ரகுபதி, எஸ்.எஸ். சிவசங்கர், மெய்யநாதன் மற்றும் காவிரி டெல்டா மாவட்ட கலெக்டர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், பொதுப்பணித்துறை, வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வெண்ணாற்றிலும் தண்ணீர் திறப்பு
கல்லணை அருகே அமைந்துள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகளுடன் அமைச்சர்கள் கல்லணையில் தண்ணீர் திறந்துவிட்டனர், அதனைத்தொடர்ந்து, வெண்ணாற்றிலும், கல்லணை கால்வாயிலும் தண்ணீர் திறக்கப்பட்டது. நிறைவாக கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்ட பின்பு கருப்பண்ணசாமி கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
விவசாயப் பணிகள் மும்முரம்
தொடர்ந்து 2-வது ஆண்டாக குறுவை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து ஜூன் 12-ல் தண்ணீர் திறக்கப்பட்டு ஜூன் 16-ல் கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படுவதால் குறுவை சாகுபடி பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
மேலும் படிக்க...
Share your comments