காவிரி ஆற்றுப்படுகையில், ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்கள் சரியான நேரத்தில் தூா்வாரப்பட்டதால் தண்ணீர் 4 நாள்களிலேயே திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களின் கடைமடைப் பகுதிக்கு வந்து சேர்ந்ததாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு
டெல்டா மாவட்ட பாசனத்திற்காக கடந்த 12–ந் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் தற்போது திருவாரூர் மாவட்ட கடைமடை பகுதியான முத்துப்பேட்டை ஒன்றியம் ஜாம்பவானோடை கோரையாற்றுக்கு வந்தடைந்தது. அந்த பகுதி நீரொழுங்கியில் தண்ணீர் செல்வதை உணவுத்துறை அமைச்சர் இரா.காமராஜ் பார்வையிட்டு மலர் தூவி வரவேற்றார். பின்னர் காலனி பாசன வாய்க்காலுக்காக நீரொழுங்கியிலிருந்து தண்ணீரை திறந்துவிட்டார்.
4 நாட்களில் கடைமடைக்கு வந்த நீர்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் காமராஜ், இந்தாண்டு மேட்டூா் அணை திறக்கப்பட்ட 4 நாள்களிலேயே திருவாரூா், நாகப்பட்டினம் மாவட்டங்களின் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீா் வந்து சேர்ந்துள்ளது. இதற்கு முன்பு கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வருவதற்கு 10 நாட்களுக்கு மேலாகும். ஆறுகள் மற்றும் பாசன கால்வாய்கள் சரியான நேரத்தில் தூா்வாரப்பட்டதே இதற்கு காரணம் என்றார்.
மேலும் திருவாரூா் மாவட்டத்தில் 1,244.06 கி.மீ. தொலைவுக்கு தூா்வார திட்டமிடப்பட்டு இதுவரை 1,239.26 கி.மீ தூா்வாரப்பட்டுள்ளதாக கூறினார். இதேபோல், குடிமராமத்து திட்டத்தின்கீழ் நடைபெற்ற தூா்வாரும் பணிகளும் 100 சதவீதம் முடிக்கப்பட்டுள்ளது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்ட காலத்திலிருந்து தற்போது வரை 24.70 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது ஒரு வரலாறு சாதனை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பாசனத்திற்கு தடையற்ற தண்ணீர்
விவசாயிகளுக்கு தேவையான விதை, பூச்சிக்கொல்லி, உரம் ஆகியவை தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பாசனத்திற்காக தண்ணீர் தொடர்ந்து வருவதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்துவருவதாகவும், விவசாயிகளுக்கு தேவையான நேரத்தில் விவசாய கடனும் வழங்க வேண்டும் என முதல்வ உத்தரவிட்டுள்ளதாகவும் அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
மேலும் படிக்க..
தென்னை மரங்களில் காண்டாமிருக வண்டுகள் தாக்குதல் - தடுப்பது எப்படி!!
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வேலை வழங்கும் புதிய திட்டம் !!
ஊரடங்கை பயனுள்ளதாக மாற்ற பயன்படும் மாடித்தோட்டம்!!
Share your comments