மழை பெய்யும் காலங்களில் பயிர்களுக்கு உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தெளிப்பதை முற்றிலும் தவிர்க்குமாறு, வேளாண் வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆலோசனைகள்
வடகிழக்கு பருவமழை தொடங்கிப் பரவலாக ஆங்காங்கே பெய்து வருவதால் விவசாயிகளுக்கு, சேலம் மாவட்ட வேளாண் வானிலை மையம் (DAMU), வானிலை அடிப்படையிலான வேளாண் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக சந்தியூர் வேளாண்மை அறிவியல் நிலையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ஆர்.ஜெக தாம்பாள் மற்றும் செ.பிரபாகரன் வானிலை பதிவாளர் அவர்கள் கூறியதாவது,
வடிகால் வசதி
கனமழை எதிர்பார்க்கப்படுவதால் விவசாயிகள் வயல்களில் மழை நீர் தேங்காதவாறு, நல்ல வடிகால் வசதி அமைத்து பயிர்களின் சேதத்தினை தவிர்க்க வேண்டும்.
தவிர்க்க வேண்டியது
மழை பொழிவின் போது பயிர்களுக்கு உரம் இடுவது மற்றும் பூச்சி மருந்து தெளிப்பினை தவிர்க்க வேண்டும்.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் கரும்பு, வாழை போன்ற பயிர்களுக்கு விட்டம் கட்டி பயிர்களின் சேதத்தினை தவிர்க்க வேண்டும்.
செயற்கை வெப்பம்
-
மழைக்காலத்தில் இளம் கோழிக்குஞ்சுகளில் இறப்பை தடுக்க ஒரு கோழிகுஞ்சுக்கு 1-2 வாட் என்ற அளவில் அடை காப்பான் மூலம் செயற்கை வெப்பம் அளிக்கப்பட வேண்டும்.
-
கோழிப்பண்ணையின் ஆழ்கூளத்தில் ஈரப்பதம் காணப்பட்டால் சுண்ணாம்புத்தூளை தூவி கிளறி விடுவதன் மூலம் ஆழ்கூளத்தின் ஈரப்பதத்தை குறைப்பதோடு கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.
-
மழை காலங்களில் மாடுகளில் கோமாரி நோய் பரவுவதை தடுக்க நோய் பாதித்த கால்நடைகளை உடனடியாக அகற்றி, தனியே வேறு இடத்தில் பராமரிக்க வேண்டும்.
-
சுண்ணாம்புத் தூளை மாட்டுக்கொட்டகையைச் சுற்றி தூவ வேண்டும்.
-
நோயுள்ள பகுதிகளிலிருந்து புதிதாக கால்நடைகளை வாங்க கூடாது.
-
வருடத்திற்கு இருமுறை கோமாரி நோய் தடுப்பூசி போட வேண்டும்.
தார்பாலின் பைகள்
-
கோழிப்பண்ணைகளில் சாரல் மழையினால் ஈரம் உண்டாவதை தடுக்க பண்ணையின் பக்கவாட்டில் தார்பாலின் அல்லது சில்பாலின் பைகளை கட்டி தொங்க விடவும்.
-
மழைக்காலங்களில் மாடுகளின் கொட்டகைச் சுத்தமாகவும், தண்ணீர் தேங்காதவாறும் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
மடி நோய்
மாடுகளில் மடி நோய் உண்டாவதை தடுக்க பொட்டாசியம் பர்மாங்கனேட் பால்கறப்பதற்கு முன்பும், பின்பும் கிருமிநாசினி கலந்து தண்ணீரில் மடி மற்றும் பால் கறப்பவரின் கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு, திட்ட ஒருங்கிணைப்பாளர், வேளாண்மை அறிவியல் நிலையம், சந்தியூர், சேலம் - 636 203, 0427 242 2550, 90955 13102, 70109 00282.
மேலும் படிக்க...
அதிதீவிரக் காற்றழுத்த தாழ்வுப் பகுதி 11-ந்தேதி சென்னையை நெருங்கும்: மிக மிக பலத்த மழை எச்சரிக்கை!
2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் 20 செ.மீ. மழை!
Share your comments