வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த நவம்பர் மாதம் தமிழ்நாடு முழுவதும் கனமழை கொட்டித் தீர்த்தது. இந்த பருவ மழை, நமக்கு 2016ஆம் மழையை நினைவூட்டியது. இந்த மாதமும் ஒரு சில இடங்களில் லேசான மழை இருந்த போதிலும், பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவி வருகிறது. இந்நிலையில் அடுத்த சில தினங்களுக்கான வானிலை அறிவிப்பை, சென்னை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அடுத்த ஐந்து தினங்களுக்கு மழைக்கு வாய்ப்பில்லை என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்திலும் தமிழ்நாட்டில் வறண்ட வானிலையே காணப்பட்டது.
சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று அதாவது டிசம்பர் 20 வெளியிட்ட அறிவிப்பில், “இன்று முதல் டிசம்பர் 24ஆம் தேதி வரை கடலோர மாவட்டங்களில் காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் தெளிவாகவும் காணப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது. சில மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் வானம் தெளிவாக காணப்படும் எனவும் தெரிவித்துள்ளது.
இன்றும் நாளையும் அதாவது டிசம்பர் 20 மற்றும் 21அன்று உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். மேலும், குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும் என்றும் சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக கடலோர மாவட்டங்களில் மட்டுமே மழையின் அச்சம் இருந்து வந்தது. இந்நிலையில் வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையின்படி கடலோர மாவட்டங்களிலும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும் என்பது குறிப்பிடதக்கது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு காலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடனும் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் தெளிவாகவும் காணப்படும் என வானிலை ஆய்வு மையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்க வாய்ப்புகள் உள்ளன.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலையே நிலவி வருவதையும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இன்று டிசம்பர் 20ஆம் தேதி குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று, மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரியகையுடன் செல்லுமாறு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
மேலும் படிக்க:
Share your comments