தமிழகத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்று ஓராண்டை நிறைவு செய்துள்ள சூழலில், கடந்த ஓராண்டில் அரசு செய்த சாதனைகளை பார்க்கலாம்.
கடந்த ஆண்டு கொரோனா 2-ம் அலை தமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருக்க, சட்டப்பேரவைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தது திமுக. கொரோனாவை கட்டுப்படுத்த துரித நடவடிக்கைகளை எடுத்த திமுக அரசு, கட்டளை மையத்தை உருவாக்கி மாநிலம் முழுவதும் இருக்கக்கூடிய சூழல்களை கண்காணித்து வந்தது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டை அமைச்சர்களின் பங்களிப்போடு எதிர்கொண்டு வெற்றி பெற்ற முதலமைச்சர், நேரடியாக பொதுமக்களின் அழைப்பிற்கும் பதிலளித்து கவனம் ஈர்த்தார்.
நாட்டிலேயே முதல்முறையாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா நான்காயிரம் கொரோனா நிவாரண நிதி மற்றும் 14 பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கியது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு. திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிப்படியே பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு, நகைக்கடன் தள்ளுபடி என அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டது திமுக. அடுத்ததாக, தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, தலைசிறந்த பொருளாதார வல்லுநர்கள் அடங்கிய குழுவை அமைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். தேர்தல் பிரசாரத்தின்போது ஒவ்வொரு தொகுதியிலும் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க, "உங்கள் தொகுதியில் முதல்வர்" எனும் தனித்துறை உருவாக்கப்பட்டு அதற்கான அதிகாரியும் நியமிக்கப்பட்டார்.
தமிழ் இலக்கியத்திற்கு வலுசேர்க்கும் படைப்புகளை தரும் எழுத்தாளர்களுக்கு இலக்கிய மாமணி விருது, கனவு இல்லம் அமைக்கவும் உத்தரவிடப்பட்டது. தகைசால் தமிழர் விருது மற்றும் கிண்டி கிங் இன்ஸ்டியூட் வளாகத்தில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை திட்டம் அறிவிப்பு போன்றவை திமுகவின் முக்கிய சாதனையாக பார்க்கப்படுகிறது.டெல்டா விவசாயிகளுக்கு குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டம், மின்துறை சம்பந்தமான புகார்களை அளிக்க விண்ணகம் எனும் புதிய மின் நுகர்வோர் சேவை மையம் ஆகியவை தொடங்கப்பட்டன. கோயில் அர்ச்சகர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் 4 ஆயிரம் ரூபாய் கொரோனா நிவாரண தொகை மற்றும் அரிசி, மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.
முக்கியமாக "முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு" எனும் நிகழ்வை கோவையில் நடத்தியது திமுக அரசு. சர்வதேச முதலீடுகளை ஈர்க்க, துபாய் மற்றும் அபுதாபிக்கு பயணம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சுமார் 6 ஆயிரத்து 100 கோடி ரூபாய் அளவிற்கு புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.கடந்த ஓராண்டில் மட்டும் திமுக அரசு 68 ஆயிரத்து 375 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்த்துள்ளதாக தெரிவித்துள்ளது. 2 லட்சத்து 5 ஆயிரத்து 802 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் உருவாக்கக்கூடிய வகையில் 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் போடப்பட்டுள்ளன.
பொதுமக்களின் இல்லங்களுக்கே சென்று மருத்துவ சிகிச்சை அளிக்கும், மக்களை தேடி மருத்துவம் திட்டம், இல்லம் தேடி கல்வித்திட்டம், கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்யும் "அன்னை தமிழ் அர்ச்சனை திட்டம்" போன்றவை திமுக ஆட்சியில் கவனம் பெற்றது. தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது. நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது. இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, அங்குள்ளவர்களுக்கு 225 கோடி ரூபாய் மதிப்பில் புதிய திட்டங்களை அறிவித்தது திமுக.
அர்ச்சகர், ஓதுவார் மற்றும் இசை கற்போர் பயிற்சிப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை 3 ஆயிரமாக உயர்த்தி வழங்கியது,
நெகிழியின் பயன்பாட்டை குறைக்கும் வகையில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை கொண்டு வந்தது என அடுத்தடுத்து பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறும் திராவிட மாடல் ஆட்சி.
மேலும் படிக்க
Education loan Scheme: குறைந்த வட்டியில் 2 லட்சம் கல்விக் கடன்
Share your comments