12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், மாணவர்களும் பெற்றோர்களும் அடுத்து என்ன என்று யோசிக்க தொடங்கியுள்ளனர். மதிப்பெண்களைப் பொறுத்து, எந்த படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என மாணவர்களும் பெற்றோர்களும் ஆலோசனை செய்து வருகின்றனர். இந்தநிலையில், மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது.
அது, கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம் உள்ளிட்ட படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் குறையும் என கல்வியாளர் ஜெயப்பிரகாஷ் காந்தி கூறியுள்ளார்.
கட் ஆஃப் மதிப்பெண்கள் (Cut off Mark)
எந்ததெந்த படிப்புகளில் எவ்வளவு கட் ஆஃப் குறையும், எந்த படிப்புகளுக்கு கட் ஆஃப் அதிகரிக்கும் உள்ளிட்ட தகவல்களை ஜெயபிரகாஷ் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜெயபிரகாஷ் காந்தி தனது யூடியூப் சேனலான, கேரியர் கைடன்ஸ் ஜெயபிரகாஷ் காந்தி என்ற சேனலில், இந்த ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்கள் கடந்த ஆண்டை விட குறையும்.
ஏனெனில், 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளைப் பொறுத்தவரை, 591-600 மதிப்பெண்களுக்கு இடையில், 656 மாணவர்கள் மட்டுமே உள்ளனர். 581 மதிப்பெண்களுக்கு மேல், 4482 மாணவர்கள் உள்ளனர். 571 மதிப்பெண்களுக்கு மேல் 11,156 மாணவர்கள் உள்ளனர். 551 மதிப்பெண்களுக்கு மேல் 30,133 மாணவர்கள் உள்ளனர். 501 மதிப்பெண்களுக்கு மேல், 1,02,928 மாணவர்கள் உள்ளனர். இவர்களில் வணிகவியல் படித்த மாணவர்களும் உள்ளனர். இதேபோல், பொறியியல் படிப்பு சேர்க்கைக்கான முக்கிய பாடங்களான கணிதம், இயற்பியல், வேதியியல் படிப்புகளில் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றவர்களின் எண்ணிக்கையும் கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது.
அதேநேரம், கடந்த ஆண்டு பொறியியல் கட் ஆஃப் மதிப்பெண்களில் 190 மதிப்பெண்களுக்கு மேல் 7,530 மாணவர்கள் இருந்தனர். 180க்கு மேலான கட் ஆஃப் மதிப்பெண்களில் 28,737 மாணவர்கள் இருந்தனர். ஆனால் இந்த ஆண்டில் 190 கட் ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் வருபவர்களின் எண்ணிக்கை சுமார் 11,000 என்ற அளவிலே உள்ளது. இதேபோல், 180க்கு மேல் வருபவர்களின் எண்ணிக்கை 20,000 என்ற அளவிலே உள்ளது. எனவே கண்டிப்பாக இந்த ஆண்டு கட் ஆஃப் மதிப்பெண்கள் குறையும். குறைந்தப்பட்சம் 4-5 மதிப்பெண்கள் வரை கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது.
அதனால், கடந்த ஆண்டு 195 க்கு மேல் கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்களின் இடங்கள், இந்த ஆண்டு 190 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கே கிடைக்க வாய்ப்புள்ளது. இதேபோல் கட் ஆஃப் 5 மதிப்பெண்கள் வரை குறையலாம்.
இதேபோல், கால்நடை மருத்துவம், வேளாண்மை மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களும் குறைய வாய்ப்புள்ளது. ஏனெனில், இந்த படிப்புகளின் சேர்க்கைக்கு தேவையான முக்கிய பாடங்களான உயிரியல், இயற்பியல், வேதியியல் பாடங்களில் 100க்கு 100 மதிப்பெண்கள் எடுத்தவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது. எனவே இந்த படிப்புகளுக்கான கட் ஆஃப் குறையலாம். வேளாண் படிப்புகளுக்கான மோகம் குறைந்து வருவதால், அந்த படிப்புகளுக்கான கட் ஆஃப் குறைய வாய்ப்புள்ளது.
அதேநேரம், வணிகவியல் படிப்புகளுக்கு போட்டி கடுமையாக இருக்கலாம். வணிகவியல் 3827 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கணக்கு பதிவியலில் 4540 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். எனவே பி.காம் படிப்புகளுக்கான போட்டி கடுமையாக இருக்கும்.
கடந்த ஆண்டு தேர்வு நடக்காததால் கட் ஆஃப் அதிகமாக இருந்தது. ஆனால் இந்த முறை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள், நேரடி வகுப்புகள் என்று நிச்சயமற்ற நிலை இருந்து, கடினமான சூழ்நிலையில் தேர்வு எழுதியுள்ளனர். இத்தகைய சூழ்நிலைகளுக்கு இடையிலும், தேர்வில் மாணவர்கள் சிறப்பாகவே செயல்பட்டுள்ளனர். இருப்பினும் கடந்த ஆண்டை விட கட் ஆஃப் குறையும்.
மேலும் படிக்க
பொறியியல் படிப்பிற்கு ஜூன் 20 முதல் விண்ணப்பிக்கலாம்!
TNPSC முக்கிய அறிவிப்பு: கணினி வழித் தேர்வுக்கு ஹால்டிக்கெட் வெளியீடு!
Share your comments