தமிழகத்தில் சுமார் 80 லட்சம் மாடுகளுக்கு மேல் வளர்க்கப்படுகின்றன. பெரும்பாலான மாடுகள் நிலமற்ற அல்லது சிறு, குறு விவசாயிகளால் வளர்க்கப்படுகின்றன. மேலை நாடுகளைப் போல் மிகப்பெரிய அளவிலான பண்ணைகள் மூலமாக இந்திய பால் துறை வளர்ச்சி அடையவில்லை. பெரும்பாலும் பத்து மாடுகளுக்கும் குறைவாக ஒற்றை இலக்கத்தில் மாடுகளை வளர்க்கும் விவசாயிகளை ஒருங்கிணைத்துத்தான் இந்திய பால்வளத் துறை உச்சத்தை தொட்டிருக்கிறது.
வெண்மைப் புரட்சி எனும் பெயரில் பால் உற்பத்தியை அதிகரிப்பதற்காக கொண்டுவரப்பட்ட திட்டங்களால் கலப்பின மாடுகள் நம் கட்டுத்தரையில் இறக்குமதியாகின. செயற்கைமுறை கருவூட்டலையே தமிழகத்தில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பின்பற்றுகின்றனர்.
தமிழகத்தில் நாட்டின மாடு ஆர்வலர்கள் மற்றும் பாரம்பரியமாக, கௌரவத்திற்காக, ஜல்லிக்கட்டு போன்ற விளையாட்டுகளுக்காக நாட்டு மாடுகள் வளர்ப்பவர்கள் நீங்கலாக ஏனையோர் அனைவரும் கலப்பினப் பசுக்களையே வளர்க்கின்றனர். செயற்கைமுறை கருவூட்டல் தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்கள் வரை சென்று சேர்ந்துவிட்டது. இப்படியான சூழலில்தான் தமிழ்நாடு கால்நடை இனப்பெருக்கச் சட்டம் 2019 என்கிற சட்ட முன்வடிவை சென்ற மாதம் தமிழக சட்டமன்றம் நிறைவேற்றியிருக்கிறது.
தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை
இந்த சட்டத்தின்படி தமிழ்நாடு கால்நடை பராமரிப்புத்துறை ஓர் புதிய அமைப்பை உருவாக்க இருக்கிறது. இந்த அமைப்பில் கால்நடை வாங்குவோர், விற்போர், வளர்ப்போர், சிகிச்சை அளிப்போர் என அத்தனை பேரும் தங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும். மாட்டுத் தொழுவங்களையும் பதிவு செய்தாக வேண்டும். தவறும்பட்சத்தில் ஐம்பதாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்க சட்டம் வகை செய்கிறது. பதிவு பெற்றுள்ள விவசாயிகளின் தோட்டத்தை, தொழுவத்தை, வீட்டை எந்த நேரத்திலும் ஆய்வு செய்வதற்கு இந்த அமைப்புக்கு/ அமைப்பினை செயல்படுத்துகிற கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த அமைப்பு சொல்லுகிற வண்ணம்தான் கால்நடை வளர்ப்போர் செயல்பட வேண்டும். தகுதியற்ற அல்லது உடல் நலன் அற்ற காளைகளை கொல்வதற்கும் இந்த அமைப்பு அதிகாரம் பெற்றுள்ளது.
அதிக பால் உற்பத்தி என்னும் இலக்கிற்காக வெளிநாட்டு மாட்டு இனங்கள் கலப்பு செய்யப்படுவதாக கால்நடைத் துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். கால்நடைத் துறை வல்லுநர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்கள் கொடுத்த பரிந்துரையின் பேரில் அவர்களுடைய ஆலோசனையின் பேரில்தான் இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டு இருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் கூட விவசாயிகளிடமும், கால்நடை வளர்ப்போரிடமும் இது குறித்த கருத்து கேட்கப்படாமல் அவசரகதியில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டு இருப்பது பல தரப்பினரையும் கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது.
எவ்வளவு விலை என்றாலும் விதைகளை வாங்கி தான் விவசாயம் செய்ய வேண்டும் என்கிற நிலைக்கு இன்றைய விவசாயிகள் தள்ளப்பட்டிருப்பது போன்று சினை ஊசிகளுக்காக தனியாரை சார்ந்து தான் இருக்க வேண்டும் எனும் சூழலை இந்தச் சட்டம் உருவாக்கும் என்பது பல தரப்பினரும் ஐயமாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக கால்நடை வளர்ப்பை தனியார்மயமாக்க அரசு முயற்சிப்பதாக குற்றம் சாட்டுவது ஏற்புடையது இல்லை என்றாலும் அதற்கான முகாந்திரம் இல்லாமலில்லை என்றும் சொல்ல முடியாது.
சட்ட முன்வடிவை மாத்திரம் வைத்துக்கொண்டு அரசாங்கம் நாட்டு மாடுகளை அழிக்க முனைவதாக குற்றம்சாட்டுவது ஏற்புடையதாக இல்லை. இருப்பினும் பல தரப்பு மக்களின் ஐயங்களை தீர்க்க வேண்டியது அரசாங்கத்தின் கடமை.
ஏற்கனவே மூன்று சினை ஊசி தயாரிப்பு மையங்களை அரசாங்கம் கொண்டிருக்கிறது. மேலும், ஒரு மையம் புதிதாக உருவாக்கப்படும் என்றும் எக்காரணத்திற்காகவும் சினை ஊசி தயாரிக்கும் பணி தனியாருக்கு வழங்கப்படாது என்றும் மானிய விலையில் சினை ஊசிகளை வழங்கும் பணி தொடரும் என்றும் கால்நடை பராமரிப்புத்துறை உறுதிபடத் தெரிவித்துள்ளது. தனியார் பால் நிறுவனங்களையும் பண்ணையாளர்களையும் முறைபடுத்துவதற்காகவே இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் கால்நடை பராமரிப்புத்துறை உறுதியாக சொல்கிறது.
காளைகளே பண்ணையின் பாதி என்பதால் நல்ல உடல் தகுதி உள்ள காளைகளையே இனப்பெருக்கத்திற்காகப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தவதற்காக இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். குளிர் பிரதேசங்களில் ஹோல்ஸ்டன் ஃப்ரீஸியன் இன மாடுகளும் சமவெளிப் பகுதிகளில் ஜெர்சி இன மாடுகளும் தான் வளர்க்கப்பட அல்லது கலப்பு செய்யப்பட வேண்டும். ஆனால், இவற்றையெல்லாம் மீறி தங்கள் இஷ்டம்போல் மாடுகளை கலப்பு செய்வதை இச்சட்டம் தடுக்கும் என்கிறார்கள் கால்நடைப் பராமரிப்புத் துறையினர்.
அனுமானங்களின் அடிப்படையில் மட்டுமே சட்டத்தை எதிர்ப்பது அழகானதல்ல. எனினும் மக்களிடம் கருத்து கேட்காமல் மக்களின் ஐயங்களை தீர்க்காமல் கேள்விகளுக்கு செவி கொடுக்காமல் அரசாங்கம் ஓர் சட்டத்தை நிறைவேற்றுவதும் அழகான முன்னுதாரணம் அல்ல. சட்டம் குறித்த தெளிவு விரைவில் கிடைக்கும் என நம்புவோம்.
Alimudeen S
Madras Veterinary College,
TANUVAS, Chennai.
9677362633
Share your comments