சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொகுசு கப்பல் பயணத்தை தொடங்கி வைத்த நிலையில், புதுச்சேரிக்குள் சொகுசு கப்பல் வருவதற்கு அந்த மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. இதற்கான காரணத்தை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
சொகுசு கப்பல் புதுவைக்கு வர அனுமதி மறுப்பு
தமிழக சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் சென்னையில் இருந்து சொகுசு கப்பல் மூலம் ஆழ்க்கடலுக்கு சென்று வரும் வகையில் சுற்றுலா திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என சமீபத்தில் நடைப்பெற்ற சட்டமன்ற கூட்டத்தொடரின் போது சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன் அறிவித்திருந்தார். இந்த சுற்றுலா திட்டத்தை ஜுன் மாதம் 4 ஆம் தேதி சென்னை துறைமுகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்த திட்டத்துக்காக கார்டெலியா க்ரூஸ் ( Cordelia Cruise ) என்ற நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை துறைமுகத்தில் இருந்து புதுச்சேரிக்கு சென்று மீண்டும் சென்னை துறைமுகம் வரும் வகையில் இரண்டு நாள் சுற்றுலா திட்டமும், சென்னை துறைமுகத்தில் இருந்து விசாகப்பட்டினம் சென்று, அங்கிருந்து புதுச்சேரி சென்று அங்கிருந்து மீண்டும் சென்னை திரும்பும் வகையில் 5 நாள் சுற்றுலா திட்டம் என இரண்டு பேக்கேஜ்களில் இந்த சொகுசு கப்பல் இயக்கப்படவுள்ளது. இரண்டு நாள் சுற்றுலா திட்டத்துக்கு குறைந்தபட்ச கட்டணமாக இரு நபருக்கு 40 ஆயிரம் ரூபாயும், ஐந்து நாள் சுற்றுலா திட்டத்துக்கு குறைந்தப்பட்ச கட்டணமாக இரு நபருக்கு 90 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சொகுசு கப்பலுக்கு அனுமதி மறுப்பு ஏன்?
இந்த கட்டணத்துக்குள் உணவும், தங்கும் செலவும் அடங்கும்.மொத்தம் 796 அறைகள் உள்ளன. இவை தவிர ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் அமர்ந்து நிகழ்ச்சிகளை ரசிக்கும் வகையில் கலையரங்கம், 4 பெரிய ரெஸ்டாரண்டுகள், மதுகூடம், உடற்பயிற்சி கூடம், ஸ்பா, மசாஜ் செண்டர், யோகாசனம் செய்யும் இடம், நீச்சல் குளம், கேசினோ, குழந்தைகளுக்கான விளையாட்டு பகுதி என பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்துள்ளது.
இந்த நிலையில் இந்த கப்பல் புதுச்சேரிக்குள் வருவதற்கு அந்த மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. இந்தநிலையில் இது குறித்து விளக்கம் அளித்த புதுச்சேரி துனை நிலை ஆளுநர் தமிழிசை, புதுச்சேரியில் சுற்றுலாவை வளர்க்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் சர்வதேச கடல் வழி, மாநிலத்திற்கான கடல் வழிஎன உள்ளது. அந்த கார்டெலியா க்ரூஸ் என்ற சொகுசு கப்பலில் உள்ள ஒரு சில நிகழ்வுகள் ஒப்புதல் இல்லாத காரணமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. நான் மட்டும் தனிப்பட்ட முறையில் அனுமதி மறுக்கவில்லை, அரசியல் கட்சிகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால் அனுமதி மறுத்ததாக தெரிவி்தார். அதே வேளையில் புதுவையில் சுற்றுலாவை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.
மேலும் படிக்க
Share your comments