உடுமலை பகுதியில் தேங்காய் விலை தொடர்ந்து சரிந்து வருவதால் கொப்பரை (Copra) உற்பத்தியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். உடுமலை சுற்றுவட்டாரப் பகுதிகளில் தென்னை விவசாயம் (Coconut Farming) பிரதானமாக உள்ளது. விவசாய கூலித் தொழிலாளர் பற்றாக்குறையால் தவித்து வரும் பல விவசாயிகளும் தென்னை விவசாயத்துக்கு மாறத் தொடங்கியுள்ளனர். இதனால் தென்னை சாகுபடிப் பரப்பு படிப்படியாக உயர்ந்து வருகிறது.
கொப்பரை உற்பத்தி
உடுமலையில் விளையும் இளநீர் மற்றும் தேங்காய் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களுக்கு அதிக அளவில் அனுப்பப்படுகிறது. மேலும் அதிக அளவில் கொப்பரை உற்பத்தியிலும் (Copra Production) விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் தற்போது தேங்காய் விலை குறைந்து வருவதால் ஒருசில விவசாயிகள் தேங்காய்களை தென்னந்தோப்புகளிலேயே இருப்பு வைக்கின்றனர். மேலும் ஒருசில விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்டும் நோக்கத்தில் கொப்பரை உற்பத்தியில் ஈடுபடுகின்றனர்.
விவசாயிகள் கூறியது:
தற்போது தேங்காய் உற்பத்தி சீசன் காலமாகும். இதனால் தேங்காய் விளைச்சல் அதிகம் இருக்கும். ஆனால் சீசன் சமயத்தில் கொரோனா 2 வது அலையின் தாக்கம் தீவிரமாக இருக்கிறது.இதனால் கடையடைப்பு, ஊரடங்கு என பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து விவசாய விளைபொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்களை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது.
நுகர்வு குறைவு
அதுமட்டுமல்லாமல் பொதுமக்கள் தற்போதைய சூழலில் பொருளாதார ரீதியாகவும் பல சிரமங்களைச் சந்தித்து வருகின்றனர்.இதனால் தேங்காய் மற்றும் இளநீர் நுகர்வு குறைந்துள்ளது. எனவே இவற்றின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஒரு டன் தேங்காய் ரூ 38 ஆயிரம் வரை விற்பனையான நிலையில் தற்போது ரூ 29 ஆயிரமாக குறைந்துள்ளது. மருந்து உரம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில் தேங்காய் விலை குறைவு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் வெள்ளை ஈக்கள் தாக்குதல் போன்றவற்றாலும் ஒருசில விவசாயிகள் மகசூல் இழப்பை (Yield Loss) சந்தித்துள்ளனர்.
எனவே இருப்பு வைத்து விற்பனை செய்வதில் ஒருசில விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் தேங்காயாக இருப்பு வைப்பதை விட கொப்பரை உற்பத்தி செய்து இருப்பு வைக்கும் போது கூடுதல் நாட்கள் இருப்பு வைக்க முடிவதுடன் கூடுதல் லாபமும் ஈட்ட முடியும்.
ஆனால் எல்லா தென்னை விவசாயிகளுக்கும் கொப்பரை உற்பத்திக்கான களம் உள்ளிட்ட போதுமான வசதிகள் இருப்பதில்லை. இதனால் பலரும் வேறு வழியில்லாமல் விற்பனை செய்து வருகின்றனர்.எனவே இந்த சூழலில் தேங்காய்க்கு ஆதார விலை நிர்ணயித்து கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுத்தால் விவசாயிகள் பயன்பெறுவர்.மேலும் கொப்பரை விலையும் தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.தற்போது ஒரு கிலோ கொப்பரை ரூ 117 க்கு விற்பனையாகிறது.எனவே கொப்பரைக்கு ரூ 120 விலை நிர்ணயித்து அரசு கொள்முதல் செய்யும் வகையில் கொள்முதல் மையங்கள் அமைக்க வேண்டும்.இதன்மூலம் கொப்பரை விலை மேலும் குறைவதைத் தடுக்க முடிவதுடன் வெளிச்சந்தையில் விலை அதிகரிக்கவும் வாய்ப்பு உருவாகும்.
மேலும் படிக்க
கடலூரில் அமோக விளைச்சலைத் தரும் கோழிக்கொண்டைப் பூ சாகுபடி!
விளைநிலங்களில் வீணாகும் தர்பூசணி பழங்கள்! இழப்பீடு வழங்க கோரிக்கை!
Share your comments