நம்மில் பலருக்கும் நாள் தொடங்குவது காபியில் தான். அது ஒரு உற்சாகமூட்டும் பானமாகவும், அந்நாளிற்கு தேவையான ஆற்றலை தருவதாகவும் நாம் நம்புவதுண்டு. உலகம் முழுவதும் காபி பிரியர்கள் நிறைந்திருக்கிறார்கள். ஒரு நாளைக்கு 3 முதல் 5 முறை காபி அருந்துபவர்கள் இருக்கிறார்கள். காலையில் எழுந்தவுடனோ, உணவை முடித்த பின்னரோ, சோர்வு ஏற்படும் போதோ நடுநடுவே சிறு இடைவேளையின் போதோ அல்லது இரவு படுக்கைக்கு செல்வதற்கு முன்பு என உலகின் பெரும்பாலானோர் தங்களுக்கான காபி அருந்தும் நேரத்தை நிர்ணயத்துள்ளனர்.
1500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே காபி குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. 17 ஆம் நூற்றாண்டில் தான் காபி இந்தியாவில் நுழைந்தது. சர்வதேச காஃபி தினம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 01 ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச காஃபி அமைப்பு (International Coffee Organization (ICO) மற்றும் உலக நாடுகளில் உள்ள காஃபி சங்கங்கள் (Coffee Associations) எல்லாம் இணைந்து மூன்றாம் ஆண்டிற்கான சர்வதேச காபி தினத்தைக் கொண்டாடி வருகிறார்கள். இந்த நாளில் உலகம் முழுவதுமுள்ள காபி வர்த்தகத்தை ஊக்குவிக்கவும், சந்தையை விரிவாக்கவும், காபி பிரியர்களை உற்சாக படுத்தவும் இந்நாளை அர்பணித்துள்ளனர். எனலாம்.
சர்வதேச அளவில் பிரபலமான காபிகள்
- அமெரிக்கானோ (America-no)
- ஐரிஷ் காபி (Irish coffee)
- எஸ்ப்ரசோ (Espresso)
- எஸ்ப்ரசோ மாச்சியாடோ (Espresso Macchiato)
- காப்பசீனோ (Cappuccino)
- காபி லட்டே (Cafe Latte)
- வெள்ளை காபி (White coffee)
- மோக்கசினோ (Mocha chino)
- டர்கிஷ் காபி (Turkish coffee)
நம்முரு காபி வகைகள்
- பில்டர் காபி
- டிகிரி காபி
- டிக்காஷன் காபி
- இன்ஸ்டன்ட் காபி
காபி பற்றிய சுவாரிஸ்ய தகவல்கள்
- முதன்முதலில் காபியை ருசி பார்த்தவர்கள் ஆடுகள் தான்.. என்றால் நம்ப முடிகிறதா? ஆம் ஒன்பதாவது நூற்றாண்டில் எத்தியோப்பியாவை சேர்ந்த கல்டி என்ற ஆடு மேய்ப்பவர், தனது ஆடுகள் வித்தியாசமான மரத்திலுள்ள கொட்டைகளை உற்சாகத்துடன் உண்பதையும், அதனால் இரவு முழுவதும் சோர்வடையாமல் கண் விழித்திருந்ததையும் கண்டு ஆச்சர்யமடைந்தார். இங்கிருந்து தான் காபியின் பிறப்பு ஆரம்பமானது.
- பிரேசில் நாட்டு தடகள வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளுக்கு செல்ல நிதி பற்றாக்குறையாக இருந்தது. அதனால் அந்நாட்டு அரசு அங்கு விளைந்த காபி கொட்டைகளை கப்பலில் ஏற்றி, அவற்றை விற்று அவர்களது செலவுகளை செய்யும் படி அறிவுறுத்தியது.
- இந்தோனேசியாவில் பூனைகளின் கழிவுகளில் இருந்து தயாரிக்க படும் லூவா காபி (Kopi Luwak), தான் உலகிலேயே அதிக விலையுள்ளதாகும். இதன் விலை தெரியுமா? ஒரு கிலோ காபி €350.
- காபி கண்டுபிடிப்பதற்கு முன்பு வரை காலை வேளைகளில் பீர் குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
- காபி பிரியர்கள் வீடுகளில் மட்டுமல்லாது பொது இடங்களிலும் காபி அருந்த காபி கடைகள் முதன் முதலாக மத்திய கிழக்கு நாடுகளில் தொடங்கப்பட்டன. இன்று காபி கடைகள் பல்வேறு பரிணாமங்களை அடைந்து விட்டன.
- காபியில் உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் நிறைந்துள்ளதால் நமது செல்களை நச்சுகள், இரசாயனங்கள் போன்றவற்றினால் பாதிப்படைவதிலிருந்து தடுக்கிறது. ஒரு நாளைக்கு மூன்று கோப்பை காபி குடிப்பவர்களுக்கு இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
- பூனைகளை தொடர்ந்து தற்போது யானைகளின் கழிவுகளில் இருந்து பெறப்படும் பிளாக் ஐவோரி காபி என்றழைக்கப்படும் காபி கொட்டைகள் தாய்லாந்தில் தற்போது பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. இதன் 35 கிராம் அளவுள்ள சிறிய பை 85 டாலர்களுக்கு அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது.
- அமெரிக்கர்கள் குறிப்பாக இளைய தலைமுறையினர் வருடத்திற்கு காபிக்காக $1,092 செலவு செகிறார்கள். இது ஒரு ஐபோன் விலை ஆகும்.
- உலக சந்தையில் பெட்ரோலுக்கு அடுத்தபடியாக கருதப்படும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் முக்கிய விற்பனைப்பொருள் இந்த காபி தான்.
- காபி சாகுபடியில் பிரேசிலில் 36%, வியட்நாமில் 18%, கொலம்பியாவில் 9% உற்பத்தி செய்யப்படுகிறது.
- அதிக எண்ணிக்கையிலான காபி பிரியர்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் பின்லாந்து முதலிடத்தில் உள்ளது. வருடத்திற்கு தனி நபர் சுமார் 12 கிலோ காபியை பருகுகிறார். அதைத்தொடர்ந்து, நார்வே (9.9 கிலோ), ஐஸ்லாந்து (9 கிலோ), டென்மார்க் (8.7 கிலோ) ஆகிய நாடுகள் உள்ளன.
Anitha Jegadeesan
Krishi Jagran
Share your comments