தரையில் வாழக் கூடிய பாலூட்டிகளில் ஆகப் பெரியது யானை. மனிதன் தவிர்த்த ஏனைய தரை வாழ் உயிரினங்களில் மிக நீண்ட காலம் யானைகள் உயிர் வாழ்கின்றன. இவற்றின் சராசரி ஆயுட்காலம் ஏறக்குறைய 70 ஆண்டுகள் ஆகும்.
ஆப்ரிக்க புதர்வெளி யானைகள், ஆப்ரிக்க காட்டு யானைகள் மற்றும் ஆசிய யானைகள் என மூன்று வகையான யானைகள் காணப்படுகின்றன. ஆண் யானைகள் களிறு என்றும் பெண் யானைகள் பிடி என்றும் இளம் யானைகள் கன்று அல்லது யானைக்குட்டி என்றும் அழைக்கப்படுகின்றன.
யானைகளின் சிறப்பு உறுப்புகள் தந்தமும் தும்பிக்கையும் ஆகும். நாம் எல்லாம் நினைப்பது போல் ஆண் யானைகளுக்கு மட்டுமே தந்தம் இருப்பதில்லை. ஆப்ரிக்க யானைகளில் இருபாலிலும் தந்தங்கள் இருக்கும். ஆசிய யானைகளில் பொதுவாக ஆண் யானைகளிலும் அரிதாக பெண் யானைகளிலும் தந்தங்கள் காணப்படும். யானை ஒன்றுக்கு இரண்டு தந்தங்கள் இருக்கும். சுமார் பத்து அடி நீளம் வரை வளரும் இந்த தந்தங்கள் 90 கிலோகிராம் வரை எடை இருக்கும். இந்த தந்தங்கள் நீட்சியடைந்த கடைவாய் பற்கள் ஆகும்.
யானையின் தும்பிக்கை சுமார் 40000 தசைகளால் ஆனது. இந்த தும்பிக்கையை யானையால் எல்லா திசையிலும் சுழற்ற முடியும். இந்த தும்பிக்கையின் உதவியால் யானைகளால் சிறு குச்சி முதல் ஆக பாரம் மிக்க பொருட்கள் வரை சுமக்க இயலும். உணவை எடுத்து உண்பதற்கான உறுப்பாகவும் நீர் பருகும் உறுப்பாகவும் இந்த தும்பிக்கையே உள்ளது. தும்பிக்கையின் நுனியில் தான் நாசித் துவாரங்கள் இருக்கும். எதிரிகளிடம் இருந்து தன்னை காத்துக் கொள்வதற்கும் இந்த தும்பிக்கையைப் பயன்படுத்துகின்றன யானைகள்.
யானையின் அதிகப்படியான உடல் எடையை தாங்குவதற்காக தடிமனான செங்குத்தான பெரிய கால்களையும் அகன்ற பாதங்களையும் கொண்டுள்ளன. எனினும் இவை செங்குத்தான மலைகளின் மீதும் ஏற வல்லவை. யானைகள் தங்களின் உடல் வெப்ப நிலையை சீராக பராமரிப்பதற்காக அதிகப்படியான இரத்தநாளங்களுடன் கூடிய பெரிய அகன்ற காதுகளைக் கொண்டுள்ளன. தடித்த எனினும் உணர்திறன் மிக்க தோல்களைக் கொண்டுள்ளன. மனிதனுக்கு அடுத்தபடியாக அதிக அறிவுத்திறனும் ஞாபக சக்தியும் கொண்டவை யானைகள். அதிகப்படியான கேட்கும்திறன் மற்றும் மோப்பத்திறனை கொண்ட யானைகள் கிட்டப்பார்வையையும் கொண்டவை.
யானைகள் பொதுவாக குழுவாக இணைந்து வாழும் தன்மை கொண்டவை. பருவமெய்திய ஆண் யானைகள் தனித்து வாழும். இனப்பெருக்க காலத்தில் மட்டும் பெண் யானை குழுவை விட்டு வெளியேறும்.
பாலூட்டிகளில் மிக அதிக சினைக்காலம் கொண்டவை யானைகள். இவற்றின் சினைக்காலம் 22மாதங்கள் ஆகும் சற்றேறக்குறைய 100கிலோ எடை கொண்ட ஒரேயொரு குட்டியை ஈனும். பிரசவக் காலத்தின் போது பிற யானைகள் அருகில் இருந்து உதவும். குட்டி யானைக் குழுவினால் வளர்க்கப்படுகிறது.
யானைகள் தாவர உண்ணிகள் ஆகும். இவற்றின் செரிமானத் திறன் 40% தான் என்பதால் அதிகப்படியான தாவரங்களை உண்ண வேண்டும். நாளொன்றுக்கு 140-270 கிலோ தாவரங்களை உணவாக எடுத்துக் கொள்கின்றன. எனவே, உணவு சேகரிக்கவே பெரும் நேரத்தை செலவிடுகின்றன. கரும்பு மற்றும் மூங்கில் போன்றவற்றை விரும்பி உண்ணுகின்றன.
யானைகளின் அழகான தந்தங்களே அவற்றுக்கு பெரிய எதிரியாக அமைந்துவிடுகின்றன. சட்டத்திற்கு புறம்பாக கள்ளச்சந்தையில் யானைத் தந்தங்கள் நல்ல விலைக்கு விற்பனையாவதால் யானைகள் வேட்டையாடப்படுகின்றன. சுருங்கிப் போன வாழிடங்கள், பெருகி வரும் சிறிய தாவர உண்ணிகள், குறைந்து வரும் தாவரங்கள், காடுகளின் குறுக்கே அமைக்கப்படும் தண்டவாளங்கள் மற்றும் சாலைகள், பெரிய அளவிலான தொழில் நிறுவனங்கள் மற்றும் அணைக்கட்டுகள் போன்ற பல காரணங்களால் யானைகளின் எண்ணிக்கை இறங்குமுகத்தில் உள்ளது. இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் யானைகளைப் பாதுகாக்கவும் இந்த தினம் சர்வதேச தினமாக அனுசரிக்கப்படுகிறது.
Alimudeen S
Madras Veterinary College,
TANUVAS,
Chennai.
Share your comments