இன்று உலக சுற்றுச்சூழல் தினம். இந்த நாள் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு தினம். 1972ல் ஸ்வீடனின் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் மனித குடியிருப்பும், சுற்றாடலும் என்ற வரலாற்றுப் புகழ்மிக்க சர்வதேச மாநாட்டை ஐக்கிய நாடுகள் சபை நடத்தியது. இம்மாநாட்டில் உலக சுற்றுச் சூழலின் முக்கியத்துவம், இயற்கை வளங்கள், அதன் பிரயோகம் என்பன பற்றி கலந்துரையாடப்பட்டது. முடிவில் ஜுன் 5 ஆம் தேதியை உலக சுற்றுச் சூழல் தினமாக (World Environment Day) பிரகடனப்படுத்தும் தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த தினத்தின் கொண்டாட்டங்களுக்குப் பொறுப்பாக ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம் (UNEP) செயற்படுகின்றது.
இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வனாந்திரங்கள், வன உயிரினங்கள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள் அனைத்தும் மனித குலத்தின் சிறப்பான வாழ்விற்காகவே இறைவனால் படைக்கப்பட்ட பொக்கிசங்களாகும். இந்த சுற்றுச் சூழலின் சமநிலையே மனிதகுலம், விலங்கினம், பறவையினம், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்விற்கான மிக முக்கியமான காரணமாகும். இச்சமநிலை தவறும் போது சுற்றுச் சூழல் மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலையும் ஆபத்தையும் ஏற்படுத்திவிடுகின்றது.
அந்த வகையில் கடந்த ஆண்டுகளில் இந்தியத் தலைநகர் உள்பட உலகின் பல நாடுகள் எதிர் கொண்ட மிகப் பெரிய சூழலியல் பிரச்சனை காற்று மாசுபாடு. அவசர நிலையை பிரகடனம் செய்யும் அளவிற்கு காற்று மாசுபாட்டின் அளவு மிக அபாயகரமான அளவை எட்டியது. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது, கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டன, பட்டாசுகள் வெடிக்க அனுமதி மறுக்கப்பட்டன, போகி கொண்டாட்டங்களின் போது விமானங்கள் தரையிரங்குவதற்கும் வாகனங்களை இயக்கவும் கடும் சிரமம் ஏற்பட்டது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு சுற்றுச் சூழல் தினத்தை காற்று மாசுபாட்டை மையப்படுத்தி கொண்டாடுமாறு ஐநா சபை கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில் 90% மேற்பட்ட மக்கள் காற்று மாசு அதிகம் உள்ள பகுதிகளிலேயே வசிப்பதாக ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. ஐந்து வயதிற்குட்பட்ட இந்தியக் குழந்தைகளில் 98% பேர் மாசுபட்ட காற்றையே சுவாசிப்பதாக இன்னொரு அதிர்ச்சி முடிவு வெளியாகி இருக்கிறது. உலக சுகாதார நிறுவனம் இதய நோய் பாதிப்புகளால் மரணம் அடையும் நான்கு பேரில் ஒருவரின் மரணத்திற்கு காற்று மாசுபாடே காரணம் என்கிறது. பலருக்கான பக்கவாதத்திற்கும் காற்று மாசுபாட்டிற்கும் தொடர்பு இல்லாமல் இல்லை. ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகளுக்கும் நுரையீரல் பாதிப்புகளுக்கும் காற்று மாசுபாடே முதன்மையான காரணமாகும்.
மனித உடல் ரீதியிலான இந்த பாதிப்புகளோடு இல்லாமல் ஐநாவிற்கு வெளியே பல நாடுகள் கூடி விவாதித்த பருவநிலை மாறுபாட்டிற்கும் காற்று மாசுபாடு காரணமாக அமைந்திருக்கிறது. அபரிமிதமான தொழில்நுட்ப வளர்ச்சியினாலும், காடுகள் எல்லாம் அழிக்கப்பட்டதாலும் காற்றில் பசுமை இல்ல வாயுக்களின் அளவு அதிகரித்து எல்நினோ எனப்படும் பருவநிலை மாறுபாட்டிற்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இதன் விளைவுகளை கடந்த சில ஆண்டுகளாக சென்னை உள்ளிட்ட இந்தியாவின் பல நகரங்களில் கொட்டித் தீர்த்த அதி தீவிர மழையின் போதே பார்த்தோம்.
சுற்றுச்சூழலை மனிதன் பாதுகாக்க கடமைப்பட்டவன். அவற்றை அனுபவிக்கும் உரிமையைக் கொண்டிருந்தாலும் நினைத்தவாறு அவற்றை சுரண்டுவதற்கான உரிமையைக் கொண்டவனல்ல. சுற்றுச்சூழலைப் பேணிப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து செயற்படத் தவறியதன் விளைவுகளைத் தான் நாம் இப்போது தாராளமாக அனுபவித்துக் கொண்டிருக்கிறோம். ஒருபுறத்தில் வறட்சி மறுபுறத்தில் வெள்ளக்கொடுமை என்று இயற்கையின் கோரத் தாண்டவத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறோம். பாதுகாக்கப்பட்ட சில பகுதிகளையும் எட்டுவதற்கு கடினமான இடங்களையும் தவிர்த்து ஏனையப் பகுதிகளில் வளர்ச்சி எனும் பெயரில் இயற்கை வளங்களை சூறையாடிக் கொண்டிருக்கிறோம்.
பல நாடுகள் தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் பசுமை இல்ல வாயுக்களின் அளவை பாதியாகக் குறைக்க ஒப்புக் கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. சீனாவில் காற்று மாசுபாட்டின் அபாயகரமான அளவை எட்டி விட்டதால் நிலக்கரியைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களை இனி செயல்பட அனுமதிப்பதில்லை என முடிவெடுத்து அதை அமல்படுத்தியுள்ளது. அதிக அளவிலான மரங்களை நடவும், வனங்களை பாதுகாக்கவும் உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தொழிற்சாலைகளுக்கு கடுமையான கட்டுப்பாட்டுகள் விதிக்கப்படுகின்றன. எரிபொருளுக்கு மாற்றாக பேட்டரியில் இயங்கும் வாகனங்களை நோக்கி உலகம் நகர்கிறது. புதுப்பிக்கத்தக்க வளங்களை பயன்படுத்துவதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அரசாங்கள் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டாலும் மக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்பட்டு இருக்கின்றதா என்பது மிகப் பெரிய கேள்விக்குறியே.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது சில நிபுணர்கள் மாத்திரம் நட்சத்திர ஹோட்டலில் கருத்தரங்குகளை நடத்தி விவாதிக்கும் ஒரு விவகாரம் என்றும் அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் இன்னும் கூட பலர் நினைக்கிறார்களே என்பதை நினைக்கும் போது வருத்தமாக இருக்கிறது. பல இடையூறுகளைத் தரும் காற்று மாசுபாட்டை எதிர் கொண்டு முறியடிப்பதற்கான விழிப்புணர்வைத் தான் மக்கள் மத்தியில் இந்த ஆண்டு ஏற்படுத்த வேண்டும் என ஐநா விரும்புகிறது. அரசாங்கங்களும் அதற்கான ஆக்கப்பூர்வ முன்னெடுப்புகளை செய்வது பாராட்டுக்குரியது. சுற்றுசூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை ஒவ்வொரு தனிமனிதனும் உணர்ந்து செயலாற்ற வேண்டும். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஒரு குறிப்பிட்ட கருப்பொருளின் அடிப்படையில் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. அதற்கேற்ப இளைஞர்களும், குழுக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும், தொழில் வர்த்தக ஊடக அமைப்புகளும், சுற்றுச் சூழலை மேம்படுத்தி அதை பாதுகாப்பதில் தங்களின் உறுதிபாட்டை வெளிப்படுத்த வேண்டும். அந்த வகையில் நாம் ஒன்றிணைந்து காற்று மாசுபாட்டை முறியடித்து நல்ல காற்றை நாமும் நமது சந்ததியினரும் சுவாசிக்க ஆக்கப்பூர்வமாக செயலாற்றுவோம். சுவாசிக்கும் காற்றை காசு கொடுத்து வாங்க நேரிடும் எனும் அறிஞர்களின் ஆருடத்தை நமது செயல்பாடுகளால் பொய்யாக்குவோம்.
காற்று மாசுபாட்டை முறியடிக்க தனிமனித முன்னெடுப்பாக சேமிக்கப்படும் மின்சாரம் உற்பத்திக்குச் சமம் என்பதை உணர்ந்து மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவோம். முடிந்தவரை பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவோம். வாய்ப்பும் இடமும் இருப்பின் நமது பொறுப்பில் மரக்கன்று ஒன்றை நட்டு மரமாக வளர்த்தெடுப்போம். நாம் தெரிந்து கொண்ட செய்திகளை தெரியாதவர்களுக்கும் சொல்வோம். அரசாங்கமும் இதர அமைப்புகளும் முன்னெடுக்கும் முயக்சிகளுக்கு ஒத்துழைப்பு நல்குவோம். மாசற்ற தூய்மையானக் காற்று நம்மால் சாத்தியமில்லை என்றால், அது சாத்தியமேயில்லை.
Share your comments