மனித வாழ்விற்கு அடிப்படை உணவு, உடை, உறைவிடம்... முதன்மையாக இருக்கும் இந்த உணவிற்கு ஒரு தினம், ஆம் இன்று உலக உணவு தினம். இந்நாளை நாம் எவ்வாறு கொண்டாட வேண்டும் என்பதை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக யோசித்திருப்போம். ஒரு சிலர் புதிய பதார்த்தத்தை முயற்சிப்பார்கள், ஒரு சிலர் அவர்களின் விருப்ப உணவை விரும்பிய இடத்தில உண்ண யோசித்திருப்பார்கள், ஒரு சிலர் அசைவ உணவை உண்ண உத்தேசித்து இருப்பார்கள். நான் சொல்வது சரிதானே?
இன்று உடலில் தோன்றும் பல விதமான நோய்களுக்கு முலக்காரணமாக இருப்பது நமது வாழ்வியலும், உணவு முறையும் என்பது மறுக்க முடியாத ஒன்று. சித்தர்கள் உணவு முறை பற்றி கூறும் போது, ' உணவே மருந்து, மருந்தே உணவு ' என்ற முறையில் உட்கொள்ள வேண்டும் என்கிறார்கள். அதுமட்டுமல்லாது மூன்று வேளையும் வகை வகையான உணவு பதார்த்தங்களை தவிர்த்து, வாழ்நாளை அதிகரிக்க இயற்கை உணவு வகைகளையும், நீர் உணவையும் அருந்தி வந்தால் நோயின்றி நீண்ட நாள் வாழலாம் என்கிறார்கள்.
இன்று நம்மில் பெரும்பாலானோரும் இயற்கை உணவை நோக்கி வரத் தொடங்கியுள்ளனர் என்பது ஒரு ஆரோக்கியமான வாழ்விற்கு அடித்தளம் ஆகும். இயற்கை உணவை சமைத்து உண்பது, பச்சையாக உண்பது என எவ்வாறு வேண்டுமானாலும் உட்கொள்ளலாம். தற்போது சமைத்து சாப்பிடும் உணவை தவிர்த்து பச்சை காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளும் உணவு முறையை பின்பற்றி வருகிறார்கள்.
உணவு விதிகள்
- எந்த உணவாக இருந்தாலும் அதிக நேரம் சமைக்க கூடாது. இல்லையென்றால் அதன் சத்துக்கள் முழுமையாக கிடைக்காது.
- துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு போன்றவற்றை முழுமையாக தவிர்த்து விடுங்கள்.
- மிஞ்சிய உணவை குளிர் சாதனப் பெட்டியில் வைத்து உண்பதை ஒரு போதும் செய்யாதீர்கள்.
- கூடுமான வரை மண் பாத்திரம், செம்பு பாத்திரம், இரும்பு பாத்திரம் போன்றவற்றில் உணவு சமைப்பதை பழக்கமாக்குங்கள்.
- அறுசுவையும் அளவோடு இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள்.
Anitha Jegadeesan
krishi Jagran
Share your comments