ஒன்றியத்திலும்,கர்நாடகவிலும் ஆளும் பாஜக அரசு நீர்பாசன திட்டங்களை நிறைவேற்றுவதில் தோல்வியடைந்துள்ளதாக கர்நாடக மாநில எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குற்றம் சாட்டியுள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், தற்போதைய சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையா நேற்று கோலார் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.கோலார் வந்த சித்தராமையாவிற்கு மாவட்ட எல்லையான நரசாபுராவில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.அதன் பின்னர் குருபரஹள்ளி கிராமத்திற்கு சென்று, புதியதாக கட்டப்பட்டுள்ள நுகர்வோர் வாணிப கழக கட்டிடத்தை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து வேம்கல் விளையாட்டு மைதானத்தில் நடந்த மகளிரணி மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய சித்தரமையா அடுக்கடுக்காக ஒன்றியம், மற்றும் கர்நாடக மாநிலத்தில் ஆளும் பாஜக அரசின் மீது குற்றம் சாட்டினார்.
நீர்ப்பாசன திட்டங்களில் தோல்வி :
சித்தராமையா கூட்டத்தில் பேசுகையில், ஒன்றியத்திலும் மாநிலத்திலும் ஆளும் டபுள் இன்ஜின் பாஜக அரசுகள் நீர்ப்பாசன திட்டங்களை செயல்படுத்துவதில் முற்றிலுமாக தோல்வியடைந்துள்ளது.வறட்சி பாதித்துள்ள கோலார், சிக்கபள்ளாபுரா, துமகூரு, பெங்களூரு ஊரகம், சித்ரதுர்கா மாவட்டங்களில் நீர்பாசன வசதிகளை ஏற்படுத்துவதற்காக தொடங்கியுள்ள எத்தினஹோளே திட்டம் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. கிருஷ்ணா நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கி பத்தாண்டுகள் கடந்தும் கர்நாடக மாநிலத்தின் பங்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் தொடங்கிய திட்டங்கள் அனைத்தும் கிடப்பில் போடப்பட்டுள்ளது எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.
எத்தினஹோளே திட்டத்தில் பிரச்சினை என்ன :
மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வறண்ட நிலங்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் எத்தினஹோளே திட்டத்துக்கு இடல்ல காவலில் 127 ஏக்கர் 34 குண்டாஸ் நிலம் தேவைப்படுகிறது.
கையகப்படுத்துவதற்காக அடையாளம் காணப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியில் பல ஆண்டுகளாக உள்ளூர் மக்கள் வசித்து வருகின்றன. அரசு பதிவுகளின்படி, 69 விவசாயிகள் நிலத்தை வைத்துள்ளனர். ஆனால், அதே நிலத்துக்கு வனத்துறையும் உரிமை கோரியுள்ளது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள நிலம் தேவைப்படுவதால், திட்டத்தை நிறைவேற்றுவதில் இழுபறி நிலை நீடித்துவருகிறது.
இதுகுறித்து சமீபத்தில், எத்தினஹோளே திட்டத்தின் தலைமைப் பொறியாளர் மாதவா, துணைத் தலைமைப் பொறியாளர் எம்.எஸ்.ஆனந்தகுமார், துணை வனப் பாதுகாவலர் கே.என்.பசவராஜ் உள்ளிட்டோருடன் நடைபெற்ற கூட்டத்திற்கு பின் பேசிய ஹாசன் துணை ஆணையாளர் எம்.எஸ்.அர்ச்சனா எத்தினஹோளே திட்டத்திற்காக கையகப்படுத்த வேண்டிய பேலூர் தாலுகாவில் உள்ள இடல்லா காவலில் உள்ள நிலத்தின் உரிமையை மாநில அரசை முடிவு செய்யும் என குறிப்பிட்டுள்ளார். மேலும் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநில அரசுக்கு விரைவில் கருத்துருவை சமர்பித்து ஒரு முன்மொழிவை அனுப்புவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க :
ஆளில்லா விமானம் தெளிக்கும் நடவடிக்கை குறித்த நேரடி செயல் விளக்கம்
Share your comments