இந்தியாவிலேயே முதன்முறையாக 5ஜி சேவையை சென்னை ஐஐடி வளாகத்தில் மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெற்றிகரமாக சோதனை செய்து பார்த்தார். இந்தியாவில் 2ஜி,3ஜி மற்றும் 4ஜி அலைக்கற்றைகள் ஏற்கனவே பயன்பாட்டுக்கு வந்து விட்டன. இந்நிலையில், விரைவில் 5ஜி சேவை துவங்கப்பட உள்ளது.
5ஜி சேவை (5G Service)
5ஜி சேவைக்காக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 5ஜி சாதனங்களை, சோதனை செய்வதற்கான கட்டமைப்பு செயல்பாட்டுக்கு வருவதாக சமீபத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், ‛5ஜி சேவை செயல்பாட்டுக்கு வந்தால் இந்திய பொருளாதார மதிப்பு அடுத்த 15 ஆண்டுகளில் சுமார் ரூ.35 லட்சம் கோடி வளர்ச்சி காணும்' எனவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் சென்னை வந்துள்ள மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ஐஐடி வளாகத்தில் நாட்டிலேயே முதன்முறையாக 5ஜி வீடியோ, ஆடியோ கால் சேவையை சோதித்து பார்த்தார். இது குறித்து அவர் கூறுகையில், "5ஜி கால் சேவையை சென்னை ஐஐடி வளாகத்தில் வெற்றிகரமாக சோதித்து பார்த்தேன். ஒட்டுமொத்தமாக உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நெட்வொர்க். நமது நாட்டால், நமது நாட்டுக்காக, உலகத்திற்காக இது தயாரிக்கப்பட்டுள்ளது. இது பிரதமரின் கனவு" எனத் தெரிவித்தார்.
5ஜி சோதனை வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 5ஜி சேவை வந்து விட்டால், இணைய சேவை இன்னும் வேகமெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை.
மேலும் படிக்க
எதற்கெல்லாம் பயன்படுகிறது இந்த ஆதார் கார்டு: தெரிந்து கொள்ளுங்கள்!
Share your comments