வெயில், மழை, குளிர் என எந்த காலநிலையானாலும், தினசரி வாழ்வில் நாம் சந்திக்கும் பல பிரச்சினைகளுக்குக் காரணமாக இருப்பவை பிளாஸ்டிக் குப்பைகள். இளநீர், ஜூஸ் குடித்துவிட்டு நாம் வீசும் ‘ஸ்ட்ரா’ முதல் ஆன்லைனில் ஆர்டர் செய்த பொருட்களை அலுங்காமல் குலுங்காமல் நம்மிடம் சேர்க்க வகை செய்யும் ‘பேக்கிங் கவர்’ வரை அனைத்தும் இந்த குப்பைகள் (Trash) லிஸ்டில் சேரும். இவற்றால் நாம் வாழும் பூமி மாசுறுகிறது என்பது புதிய தகவலல்ல.
பிளாஸ்டிக் (Plastic) பயன்பாட்டை நம்மால் ஏன் குறைக்க முடியவில்லை அல்லது முயலவில்லை என்பது நம் உயிரின் மதிப்புக்கு ஈடானதொரு கேள்வி. தமிழ்நாடு அரசு சமீபத்தில் அறிவித்துள்ள ‘மீண்டும் மஞ்சப்பை’ திட்டம் பிளாஸ்டிக் ஒழிப்பை முன்னெடுக்கும் என்று தோன்றுகிறது. இது முன்னோடித் திட்டமாக மாறுமா?
எங்கும் பிளாஸ்டிக் குப்பைகள்!
ஒருமுறை மட்டுமே பயன்படுத்தத்தக்க பிளாஸ்டிக் பொருட்களால் இந்த உலகமே வாழத் தகுதியற்றதாக மாறிக்கொண்டிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாக இவற்றின் உற்பத்தி தாறுமாறாக எகிறியிருக்கிறது. உலகம் முழுக்க, ஒவ்வொரு நிமிடமும் 10 லட்சம் தண்ணீர் பாட்டில்கள் வாங்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் 5 லட்சம் கோடி பிளாஸ்டிக் பைகள் உலகம் முழுக்கப் பயன்படுத்தப்படுகின்றன. ஒட்டுமொத்தமாக, உலகில் தயாரிக்கப்படும் பிளாஸ்டிக்குகளில் பாதிக்கும் மேற்பட்டவை ஒரு முறை பயன்படுத்தத்தக்க வகையிலேயே இருக்கின்றன.
மறுசுழற்சி (Recycling)
1950 முதல் 1990வரை உலக மக்கள் பயன்படுத்திய பிளாஸ்டிக் அளவைவிட, மிக அதிகமாக 2000களில் அதன் பயன்பாடு இருந்தது. தற்போது, ஆண்டுக்கு 30 கோடி டன் பிளாஸ்டிக் குப்பைகள் பெருகுவதற்கு நாம் காரணமாக இருக்கிறோம். ஆனால், இக்குப்பைகளில் 10 முதல் 13% வரை மட்டுமே மறுசுழற்சிக்கு (Recycle) உட்படுத்தப்படுகின்றன.
மீதமுள்ள பிளாஸ்டிக் குப்பைகள் பெரும்பாலும் ஒருமுறை பயன்படுத்தத் தக்கதாகவே இருக்கின்றன. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக நிலத்தில், நீரில் கலந்துவிட்ட இக்குப்பைகளால் நீர் மண்ணில் இறங்காது; இந்த பிளாஸ்டிக்குகள் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் மட்காது. இந்தத் தகவல்களில் ஒன்றிரண்டாவது நம் அனைவருக்கும் தெரியும். இருந்தாலும் நம்மால் ஏன் பிளாஸ்டிக் பயன்பாட்டைக் கைவிட முடிவதில்லை? காரணம், சுத்தம் சுகாதாரம் குறித்த நம்முடைய தவறான பார்வை.
மஞ்சப்பை தான் தீர்வு (Yellow Bag)
துணிப்பைகள் உள்ளிட்ட மீண்டும் பயன்படுத்தத்தக்க வகையிலான பைகளைப் பயன்படுத்தலாம். நிலத்தடி நீர் பாதிப்பு தொடங்கி மழை நீர் செல்ல முடியாமல் பாதாளச் சாக்கடைகள், மழைநீர் வடிகால், ஓடைகள், ஆறுகள், கடல் முகத்துவாரங்கள் என்று அனைத்திலும் பிளாஸ்டிக் குப்பைகள் தேங்கி நிற்கின்றன. சிறு மழைக்கே பெருநகரங்களில் தண்ணீர் தேங்கிக் கிடக்க இவையே முக்கியக் காரணம். இந்தச் சூழலில் தமிழக அரசு அறிவித்த திட்டத்தினால் மட்டும் நன்மை கிடைக்காது; அப்படியொரு நிலையை அடைய, கடும் பிரயத்தனத்தை மேற்கொள்ளும் அதிகாரிகளுக்கும் அரசியல்வாதிகளுக்கும் பொதுமக்கள் தோள் கொடுக்க வேண்டியது அவசியம்.
பிளாஸ்டிக் ஒழிப்பு என்பது தற்போதைய சமூகத்திற்கான பிரச்சனையல்ல; எதிர்காலத் தலைமுறையினருக்கான பேராபத்து. இந்த நோக்கில் விழிப்புணர்வு முன்னெடுக்கப்பட்டால் மட்டுமே, இனிமேலாவது இவ்வுலகில் பிளாஸ்டிக் குப்பைகள் சேராமல் பார்த்துக்கொள்ள முடியும்!
மஞ்சப் பை என்பது ஒரு குறியீடுதான். எந்த நிறமாக இருந்தாலும் துணிப் பையைப் பயன்படுத்துவது நன்மை பயக்கும். நாம் தவிர்க்கும் ஒவ்வொரு பிளாஸ்டிக் பொருளும் இந்த உலகத்தின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க நாம் செய்யும் சிறு சேவை என்பதை உணர வேண்டும்.
மேலும் படிக்க
தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தயாரிப்பு பற்றி தகவல் அளிப்பவருக்கு வெகுமதி!
சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவி செய்தால் ரூ.5,000 பரிசு!
Share your comments