செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மற்றும் வடகிழக்கு இந்தியாவில் கனமழை பெய்யும் எனவும், அதன்பின் குறையும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதைப்போல், வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக் கடலில் புதிய சூறாவளி காற்று சுழற்சியின் காரணமாக செப்டம்பர் 12 முதல் ஒடிசா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மழைப்பொழிவு அதிகமாக வாய்ப்புள்ளதாகவும் IMD தெரிவித்துள்ளது.
தமிழகத்தினை பொறுத்தவரை இன்று மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இரு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் விவரம் பின்வருமாறு-
09.09.2073 மற்றும் 10.09.2023; தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
11.09.2023 முதல் 15.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள் (09.09.2023 முதல் 12.09.2023) வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
வங்கக்கடல் பகுதிகள்:
09.09.2023: தெற்கு இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் குறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
10.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்: (09.09,2023) வடக்கு கேரளா-கர்நாடக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள். மேலும் விவரங்களுக்கு: mausam.imd.gov.in/chennai இணையதளத்தை காணுமாறு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தகவல் தெரிவித்துள்ளார்.
மேலும் காண்க:
ஒரே நாளில் சவரனுக்கு ரூ.160 குறைந்தது தங்கம்- இன்றைய விலை நிலவரம்
Share your comments