வேலை கிடைக்கவில்லை என்று மக்கள் புலம்பும் காலம் போய், வேலைக்கு வாங்கப்பா என்று கெஞ்சி வேலைக்கு ஆள் தேடும் வகையில் காலம் மாறிவிட்டது. வேலை தேடுபவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு. திருப்பூரில் வேலை ரெடி.
பின்னல் ஆடைகள் மற்றும் ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற தொழில் நகரம் தான் திருப்பூர். இங்கு உள்ள ஆடை தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்புகள் எப்போதுமே ரெடியாக இருக்கும். எனவே, வேலை தேடி ஒரு காலதில் மக்கள் சென்னைக்கு விரைந்து செல்வதால், சென்னை மாநகரம் ‘வந்தாரை வாழ வைக்கும்’ சிங்கார சென்னையாக பெயர் பெற்றது.
தற்போது பல நகரங்களில் வேலைவாய்ப்புகள் இருந்தாலும், திருப்பூர் வேலை தேடுபவர்களுக்கு ஒரு சொர்க்க பூமியாகவே இருக்கின்றது. ஆனால், வேலைக்கு தான் ஆட்கள் கிடைப்பது இல்லை. பணியாளர்கள் கிடைக்காததால், தொழில் பாதிக்கப்படும் தொழிலதிபர்கள் புதுவித யுக்திகளை கடைபிடித்து ஆட்களை வேலைக்கு சேர்க்கிறார்கள்.
தையல்வேலைக்கு ஆட்கள் வந்தால், தங்க மோதிரம் பரிசு தருகிறோம் என்று சொல்லி ஆட்களை சேர்க்கிறார்கள் நிறுவனத்தினர். பின்னலாடைத் தயாரிப்பில் ஓவர்லாக் செய்வது மிகவும் அவசியமான ஒன்று
தொழில்முறை ஓவர்லாக் தையல்காரர்களின் கடுமையான பற்றாக்குறையால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு ஆடை தொழிற்சாலை உரிமையாளர் தனது நிறுவனத்தில் எட்டு மாதங்கள் வேலை செய்யும் தையல்காரருக்கு தங்க மோதிரம் தருவதாக உறுதியளித்துள்ளார். இது வழக்கமாக கொடுக்கப்படும் சம்பளம் மற்றும் பிற சலுகைகளுக்கு மேலதிக கூடுதல் சலுகையாகும்.
ஆடை தொழிற்சாலை உரிமையாளரான குமார் என்பவர் இந்த புதுவித அறிவிப்பை அறிவித்துள்ளார். ஏற்றுமதியாளர்களிடமிருந்து மொத்த ஆர்டர்களைப் பெற்று ஆடைகளை தயாரித்து வழங்கும் பணி செய்து வருகிறார். தற்போது, திறமையான ஓவர்லாக் தையல்காரர்கள் கிடைப்பது கடினமாக இருப்பதால் தொழிலில் சிரமம் ஏற்படுவதாக கூறுகிறார்கள்.
வாரந்தோறும் 6000 ரூபாய் சம்பளம் வழங்கினாலும் ஆட்கள் கிடைப்பதில்லை என்று கூறும் அவர், வேலைக்கு சேர்பவர்கள் சில நாட்களிலேயே வேலையில் இருந்து நின்றுவிடுவதாக தெரிவிக்கிறார்.
பொதுவாக ஆடை தயாரிக்கும் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு வாராந்திர சம்பளம் வழங்கும் வழக்கம் இருப்பதால், ஒரு வாரம் வேலை செய்துவிட்டு, அதிகம் சம்பளம் கிடைத்தால் வேறு இடங்களுக்கு சென்றுவிடுகிறார்கள். இதனால் பல தொழிற்சாலைகளிலும் ஆட்கள் கிடைக்காத பிரச்சனை இருக்கிறது.
தென்னிந்தியாவில் ஆடை ஏற்றுமதியின் முக்கிய மையமாக கருதப்படும் திருப்பூரில் இருந்து பல பிரபலமான பிராண்டுகளுக்கு ஆடை உற்பதி செய்து அனுப்பப்படுகிறது. தமிழ்நாட்டிலிருந்து அவுட்சோர்சிங் மூலம் இந்த பணிகள் நடத்தப்படுகின்றன.
திருப்பூர் ஆண்டிபாளையத்தில் பல ஆண்டுகளாக ஆடை உற்பத்தி ஆலையை நடத்தி வரும் குமார் அவர்கள் தொழில்முறை ஓவர்லாக் தையல்காரர்கள் கிடைக்காமல் அவதிப்படுகிறார்.வேலைக்கு ஆட்கள் ஒழுங்காக வராவிட்டால், பெருத்த நட்டம் ஏற்படும். இதுபோன்ற பிரச்சனைகளால் ஆர்டர்களை எடுக்க முடியாமல் தவிக்கும் குமார், இதற்காக குறைந்தபட்சம் எட்டு மாதங்கள் தன்னிடம் பணிபுரியும் ஓவர்லாக் தையல்காரருக்கு தங்க மோதிரத்தை வழங்கும் திட்டத்தை அறிவித்தார். இதற்கான விளம்பரத்தை திருப்பூர் நகரம் முழுவதும் சுவரொட்டிகளை ஒட்டியிருக்கிறார்.
குமாரைப் போலவே, திருப்பூரில், தையல் தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் ஆடை தொழிற்சாலை உரிமையாளர்கள் ஆட்களை ஈர்க்கும் வகையில் சலுகைகளை வழங்கி வருகின்றன. ஒரு தொழிற்சாலை உரிமையாளர் தொலைதூர கிராமங்களில் இருந்து வேலைக்கு வரும் ஓவர்லாக் தையல்காரர்களுக்கு நாளொன்றுக்கு இரண்டு லிட்டர் பெட்ரோல் வழங்கி வருகிறார்.
மற்றொருவர் தன்னிடம் வேலை செய்பவர்களுக்கு மதுபானம் கொடுக்கிறார். ஆனால் பிற சலுகைகளுக்கு எழாத எதிர்ப்பு, மதுபானம் கொடுத்தபோது எழுந்தது. எனவே அவர் அந்த சலுகையை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதுபோன்ற விளம்பர யுக்திகளை சிறிய தொழிற்சாலை வைத்திருப்பவர்கள் தான் செய்வார்கள் என்று சொல்கிறார் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் ராஜா சண்முகம். இந்த வித்தியாசமான சலுகைகள் தையல்காரர்களின் பற்றாக்குறையின் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. ஒருபோதும் பெரிய நிறுவனங்கள் இப்படி செய்வதில்லை என்று கூறுகிறார்.
ஆனால், இதிலிருந்து என்ன புரிகிறது? வேலைவாய்ப்பு இல்லை என்று பலர் கவலைப்பட்டாலும், வேலைக்கு ஆள் இல்லாமல் திண்டாடும் தொழிற்சாலை உரிமையாளர்களும் உள்ளார்கள். எனவே தேவைக்கு ஏற்றவாறு திறமையை வளர்த்துக் கொண்டால் வேலைவாய்ப்புகளுக்கு என்றும் பஞ்சமில்லை என்று தெளிவாகிறது.
மேலும் படிக்க:
Share your comments