நடுத்தர குடும்பத்தினரின் சொந்த வீட்டுக் கனவை நனவாக்க, மத்திய அரசும் நிதியுதவி செய்து உதவுகிறது. இதனைச் செயல்படுத்திவரும், பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
சொந்த வீடு என்பது நம்மில் பலரது கனவாக இருக்கும். ஏன் மிகப்பெரிய இலக்காகக்கூடக் கருதி, அதனை அடைய அயராது உழைத்துக்கொண்டிருப்பர். அவர்களின் நிதிச்சுமையைக் குறைக்கும் வகையில், மத்திய அரசு நிதியதவி அளித்துவருகிறது. இந்தத் திட்டம்தான் பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம்.
2024ஆம் ஆண்டு வரை
இந்நிலையில், பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் (Pradhan Mantri Awas Yojana - Urban) திட்டம் 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டத்தை 2024ஆம் ஆண்டு வரை நீட்டிப்பது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
ஒப்புதல்
கடந்த 2022 மார்ச் 31ஆம் தேதிக்குள் கட்டி முடிக்கப்பட வேண்டிய 122.69 லட்சம் வீடுகளுக்கு நிதியுதவி வழங்குவதற்கும் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்துக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
100 லட்சம் வீடுகள்
2017ஆம் ஆண்டில் பிரதமர் நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் முதலில் 100 லட்சம் வீடுகளை கட்டி முடிப்பதற்காக திட்டமிடப்பட்டது. திட்டமிடப்பட்டதை விட கூடுதல் வீடுகளுக்கு தேவை இருந்தது. ஆனால் திட்டமிட்டதை விட அதிகமான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. இதுவரை சுமார் 62 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. தற்போது 102 லட்சம் வீடுகளுக்கான கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.
கூடுதலாக 40 லட்சம் வீடுகளுக்கு தேவை இருப்பதால் மாநில அரசுகள் மற்றும் ஒன்றிய பிரதேச அரசுகளின் கோரிக்கையின் அடிப்படையில் பிரதமர் வீட்டு வசதி திட்டம் 2024ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் வட்டாரத்தில் கூறுகின்றனர்.
ரூ1.20 லட்சம்
பிரதமர் வீட்டு வசதி திட்டத்தில் வீடு கட்டுவதற்கு மத்திய அரசு சார்பில் ரூ.1.20 லட்சம் வரை நிதியுதவி வழங்குகிறது. திட்டத்தை அமல்படுத்துவது, பயனாளிகளை தேர்வு செய்வது ஆகியவை மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகளின் பணியாகும்.
மேலும் படிக்க...
விடாது துரத்தும் காகங்கள்- தலையில் கொத்துவதால் அலறும் பெண்மணி!
Share your comments