30 days plan
கை மீறும் செலவைக் கட்டுப்படுத்தி சேமிப்பை அதிகரிப்பதற்கு நிபுணர்கள் பரிந்துரைக்கும் முறைதான் ‘30 நாள் விதி’. இந்த விதியை செயல்படுத்துவது எளிதானது. இதைத் தொடர்ந்து பின்பற்றும்போது, சேமிப்பை எளிதாக உயர்த்த முடியும்.
30 நாள் திட்டம் (30days plan)
பெரும்பாலானவர்கள் ஆன்-லைன் விற்பனை மையங்கள் வழங்கும் சலுகைகளால் ஈர்க்கப்பட்டு பொருட்கள் வாங்குவார்கள். இந்த செயல்பாடே சேமிப்பைத் தொலைப்பதற்கான முக்கிய காரணம். இவ்வாறு எதைப் பார்த்தாலும் உடனே வாங்கி விடும் பழக்கம் உள்ளவர்களுக்கும், சம்பாத்தியத்தை சரியான இடங்களில் ஒதுக்க முடியாமல் திணறுபவர்களுக்கும் ‘30 நாள் திட்டம் (30days plan)' ஏற்றதாக இருக்கும். இதைப் பின்பற்றும்போது, பணத்தை எதற்காக செலவிடுகிறோம்? என்பதில் தெளிவு ஏற்படும்.
எப்படிப் பின்பற்றுவது?
‘தேவை’ என்பது அனைவருக்கும் பொதுவானது. அதை அத்தியாவசியத் தேவை, நிதானத் தேவை என இரண்டாகப் பிரித்துக் கொள்ளுங்கள். மாதந்தோறும் குடும்பத்துக்காக மேற்கொள்ளும் செலவுகள் அத்தியாவசியத் தேவையில் சேரும். இதிலும், அந்த மாதத்திற்கு எது அவசியமாகத் தேவையோ அதை மட்டும் வாங்குவதற்குத் தீர்மானியுங்கள். அதை நீங்கள் போடும் பட்ஜெட்டுக்குள் அடக்குவதற்கு முயற்சி செய்யுங்கள்.
இதற்கு அடுத்தபடியாக, நிதானமானத் தேவை. இதில் நாம் வாங்குவதற்கு ஆர்வம் காட்டும், தற்சமயம் நமக்கு அவசரமாகவும், அத்தியாவசியமாகவும் தேவைப்படாத, பொருட்கள் அடங்கும். அந்தப் பொருளை வாங்குவதற்கு முன்னும், பின்னும் அதற்கான பணமதிப்பைக் கூர்ந்து கவனியுங்கள். இதுதான் ‘30 நாள் விதி’யின் அடிப்படை.
பின்பு, நீங்கள் வாங்குவதற்கு நினைக்கும் பொருளை முதலில் குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அதை வாங்கும் முன், அந்தப் பொருளின் தன்மை, தயாரிப்பு நிறுவனம், விலை மற்றும் வாங்குவதில் கிடைக்கும் சலுகைகள் என அனைத்து விவரங்களையும் சேகரியுங்கள். அடுத்து அந்தப் பொருளை வாங்கும் எண்ணத்தை 30 நாட்கள் தள்ளி வையுங்கள். பொருட்களை வாங்க வேண்டும் என தீர்மானித்து முடிவு எடுத்த பின்பு அதைத் தள்ளி வைப்பதால் என்ன பயன் ஏற்படும்? இந்தக் கால இடைவெளியில், அந்தப் பொருள் மீதான ஈர்ப்பு குறைந்திருப்பதை உணர முடியும்.
சரியான தீர்வு (Right solution)
30 நாட்களில், குறிப்பிட்ட பொருளின் விற்பனை, விலையில் ஏற்படும் ஏற்ற, இறக்கங்களைக் கவனிக்க வேண்டும். மேலும், அந்த நேரத்தில், அது அவசியமானதா? என்பதை யோசிக்கும்போது, சரியான தீர்வை எளிதில் காண முடியும். இதை அனைத்து தேவைகளிலும் செயல்படுத்தினால், செலவைக் குறைத்து சேமிப்பை உயர்த்த முடியும். 30-நாள் விதியின்படி, வாழ்க்கை முறையை மாற்றினால் அது சேமிப்பிற்கான சரியான பாதையில் செல்வதற்கு உதவும்.
மேலும் படிக்க
Share your comments