திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில், இயற்கைக்கு கெடுதல் விளைவிக்காத, தென்னை நாரில் பரிசு கொடுக்க, 'கிப்ட் பேக்' தயாரிக்கப்படுகிறது. மண் வளம் காக்க இதனை பயன்படுத்தலாம் என்கின்றனர் தென்னை நார் உற்பத்தியாளர்கள். திருமணம், புதுமனைபுகுவிழா, காதுகுத்து, பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு விசேஷங்களுக்கு செல்பவர்கள், 'கிப்ட்' கொடுப்பது வழக்கம். சிலர், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், சிலர் கடிகாரம், சுவரில் பொருத்தும் இயற்கை காட்சிகள், சுவாமி படங்களையும், பேக்கிங் செய்து கொடுக்கின்றனர்.
கிஃப்ட் பேக் (Gift Bag)
இயற்கைக்கு எவ்வித கெடுதல் விளைவிக்காத, தென்னை நாரில், 'கிப்ட்' தயாரிக்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கு வருவோரை வெறும் கையாடு அனுப்பக்கூடாது என்ற கலாசாரம் பொள்ளாச்சி பகுதியில் உள்ளது. அதனால், தற்போது திருமண விழாக்களுக்கு வருவோருக்கு, 'காயர் கிப்ட்' வழங்குவது வரவேற்பை பெற்றுள்ளது. தேசிய தென்னை நார் கூட்டமைப்பு தலைவர் கவுதமன் கூறியதாவது: இந்தியாவில், 14 மாநிலங்களில், தென்னை நார் தொழிற்சாலைகள் உள்ளன. கடந்த, இரண்டு ஆண்டுகளாக உலக பொருளாதாரம் தேக்கமடைந்துள்ளதால், தென்னை நார் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், தென்னை நார் பொருட்களுக்கு ஏற்றுமதிக்கான வாய்ப்புகள் உள்ளன. உலக தலைவர்கள் பங்கேற்க கூடிய மாநாடுகளில், இயற்கையை பாதுகாக்க வலியுறுத்தப்படுகிறது. தென்னை நார், இயற்கைக்கு எவ்விதமான குந்தகமும் ஏற்படுத்தாதது. இது, உலக தர ஆய்வு நிறுவனங்களில் நிரூபணம் செய்யப்பட்டுள்ளது. தென்னை நாரில் ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. இவற்றுக்கு உலக நாடுகளில் வரவேற்பு உள்ளது.
புதுமனை புகுவிழா, திருமணம், காது குத்து என எந்த விசேஷங்கள் நடந்தாலும், 'கிப்ட்' கலாசாரம் உள்ளது. தமிழர்கள் பாரம்பரிய முறைப்படி, நிகழ்ச்சிக்கு வருவோருக்கு, தேங்காய் உள்ளிட்டவை வைத்து, 'கிப்ட்' வழங்குகின்றனர். ஒரு சிலர், பொருட்களை, 'கிப்ட்' ஆக கொடுக்கின்றனர். இதுபோன்று, 'கிப்ட்' வழங்குவதால், இந்தியாவில் மட்டும் ஒரு ஆண்டுக்கு, 1,300 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கழிவு சேகரமாகுகின்றன. இவற்றை தவிர்க்க இயற்கையுடன் இணைய வேண்டும். தேசிய தென்னை நார் கூட்டமைப்பு வாயிலாக, 'கிப்ட்' பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. திருமணம் என்றால், மணமகன், மணமகள் பெயருடன், ஒரு சுருக்கு பை போன்று தென்னை நாரில் தயாரித்து, 'பேக்கிங்' முன்பகுதியில் அச்சிடப்படுகிறது.
நவீன விவசாயம் (Modern Agriculture)
'பேக்கிங்'கிற்குள், கோகோ பித் இரண்டு கட்டிகளும், விதைகள் அடங்கிய 'பாக்கெட்'டும் இருக்கிறது. இது, 25 - 30 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தற்போது, ஒரு கிலோ தென்னை நார், 10 ரூபாய் விற்க கடுமையாக போராட வேண்டியுள்ள நிலையில், இது போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பதால், பொருளாாதரம் மேம்படும். குழந்தைகளுக்கு, நவீன விவசாயம் குறித்து விளக்கமளிப்பதுடன், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த உதவியாக இருக்கும் என்பதால் இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு தற்போது நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தென்னை நார் கூட்டமைப்பு வாயிலாக, இதற்காக பயிற்சியும் அளிக்கப்படுகிறது.
இந்த 'கிப்ட்' பேக்கில் உள்ள கோகோபித் கட்டியை, தண்ணீரில் போட்டால் உப்பிக்கொள்ளும்; அதன்பின், விதைகளை போட வேண்டும். அவை முளைத்த பின், குரோபேக்குக்கு மாற்றலாம்.சுருக்கு பையானது, ஜூட், காயர் கலந்தது. செல்போன் வைத்துக்கொள்ள உதவும். மண்ணில் போட்டால் மண்ணுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.இந்த 'கிப்ட்' பேக்குக்குள், செயல்விளக்கம் அட்டவணையும் வைக்கப்பட்டுள்ளது. மண்வளம் காக்க, இயற்கைக்கு எவ்வித கெடுதலும் இல்லாத இது போன்ற தென்னை நார் பொருட்களை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும். தற்போது, ஒரு சிலர் திருமண விழாக்களில் பயன்படுத்த துவங்கியுள்ளனர். இது ஒரு மாற்றத்துக்கான விதையாக நினைக்கிறோம். சில ஆண்டுகளில் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க
எலுமிச்சையில் நுண்ணூட்ட மேலாண்மை: மகசூலை அதிகரிக்கும் நுடபம்!
Share your comments