தமிழகத்தில் பரவலாக மழை பொழிய வாய்ப்புள்ளது. அடுத்த 4 நாட்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணத்தினால் இன்று நீலகிரி, கோவை, வட கடலோர மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை நீலகிரி, கோவை, தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை கனமழை பெய்யக்கூடும். 21-ந்தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், மற்றம் சில பகுதிகளில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
2-ந் தேதி திருச்சி, மதுரை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழையும், மீதமுள்ள மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் மிதமான மழையும் பொழியும் நிலை உள்ளது.
23-ந் தேதி உள் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கனமழையும், ஏனைய மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 9 செ.மீட்டர், சின்னக்கல்லார் 8 செ.மீட்டர், சோலையார் 7 செ.மீ., சின்கோனா, பந்தலூர் தலா 6 செ.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க:
Share your comments