குறைந்த வட்டி விகித சூழலில் வீட்டுக் கடனை மாற்றுவது பலன் அளிக்கும் என்றாலும், இதற்கு முறையாக திட்டமிடுவது அவசியம்.
பண்டிகை காலத்தை முன்னிட்டு, முன்னணி வங்கிகள் வீட்டுக் கடனுக்கான பல்வேறு சலுகைகளை அளித்து வரும் நிலையில், சொந்த வீடு வாங்க திட்டமிட்டுள்ளவர்கள் வீட்டுக் கடன் வாங்குவதற்கு ஏற்ற நேரமாக கருதப்படுகிறது. வட்டி விகிதமும் குறைவாக உள்ள சூழலும் சாதகமாக அமைகிறது.
புதிதாக வீடு வாங்க விரும்புகிறவர்கள் தவிர, ஏற்கனவே வீட்டுக் கடன் பெற்றவர்களும், குறைந்த வட்டி விகித பலனை பெற தங்கள் வீட்டுக் கடனை வேறு வங்கிக்கு மாற்றிக்கொள்வதற்கு பொருத்தமான காலமாகவும் இது அமைகிறது. எனினும், வீட்டுக் கடன் மாற்ற வசதி உரிய பலனை அளிக்கும் வகையில் அமைவதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
யாருக்கு ஏற்றது?
பொதுவாக அதிக வட்டி விகிதத்தில் வீட்டுக் கடனுக்கான தவணை செலுத்தி வருபவர்கள், கடனை வேறு வங்கிக்கு மாற்றும் வாய்ப்பு பற்றி பரிசீலிக்கலாம் என்றாலும், கடனுக்கான காலம் அதிகமாக உள்ளவர்களுக்கே இது அதிக பலன் அளிக்கும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
கடன் வாங்கி ஆரம்ப நிலையில் இருப்பவர்கள் மற்றும் கடன் நிலுவைத் தொகை 50 சதவீதத்திற்கு மேல் உள்ளவர்களுக்கு இது ஏற்றதாக இருக்கும். கடன் நிலுவைத் தொகை அதிகமாக இருக்கும் அளவுக்கு மாற்றத்தின் பலனும் அதிகமாக இருக்கும். ஏற்கனவே கணிசமான காலம் கடன் செலுத்தியவர்களுக்கு, கடன் மாற்றம் பெரிய அளவில் பலன் தர வாய்ப்பில்லை.
கடன் ஆரம்ப காலத்தில், மாத தவணையில் அசலை விட வட்டி அதிகமாக இருக்கும் என்பதே இதற்கு காரணம். வீட்டுக் கடன் வட்டி விகிதத்தை ஒப்பிட்டு பார்த்து, கிடைக்கக்கூடிய சிறந்த வட்டி விகிதத்தை விட தற்போதைய வட்டி விகிதம் அதிகமாக இருக்கும் நிலையில் கடன் மாற்றத்தை நாடலாம்.
இதர கட்டணங்கள்
குறைந்தபட்சம் வட்டி விகித வேறுபாடு, 60 அடிப்படை புள்ளிகளுக்கு கூடுதலாக இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என வல்லுனர்கள் கருதுகின்றனர். ரெப்போ விகிதம் தவிர, பழைய விகிதத்தில் கடன் பெற்றுள்ளவர்களுக்கு மாற்றம் ஏற்றதாக இருக்கும் என்றும் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். வட்டி விகிதம் வேறுபாடு சாதகமாக இருந்தால், வீட்டுக் கடன் செலுத்தி வரும் வங்கியை நாடி கடன் வசதிக்காக விண்ணப்பிக்கலாம்.
ஆனால், கடன் மாற்றத்தை தீர்மானிக்கும் போது வட்டி விகிதத்தை மட்டும் கணக்கிட்டால் போதாது. கடன் மாற்றுக்கு பொருந்தக்கூடிய பிற கட்டணங்கள் உண்டு என்பதை அறிய வேண்டும். செயல்முறை கட்டணம், முத்திரைத் தாள் கட்டணம், சட்டக் கட்டணம் போன்றவற்றை கணக்கிட்டு பார்க்க வேண்டும். இதன் பின்னும், கடன் மாற்றம் பலன் அளிக்கக் கூடியதாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
கடன் மாற்றம் செய்யும் போது, புதிய வங்கியின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளையும் பரிசீலிக்க வேண்டும். கடனை முன்கூட்டியே செலுத்துவது தொடர்பான நிபந்தனைகள் வங்கிக்கு வங்கி மாறுபடலாம். புதிய வங்கியின் விதிமுறைகளும் சாதகமாக இருப்பதை உறுதி செய்து கொள்வதும் அவசியம். மேலும், புதிய வங்கி தொடர்பான மற்ற அம்சங்களையும் பரிசீலிக்க வேண்டும். கடனை மாற்றும் போது, வீட்டுக் கடன் மீதான கூடுதல் கடன் வசதியை புதிய வங்கி அளிக்க முன்வரலாம். தேவை என்றால் மட்டுமே இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க
வருமானத்தை பெருக்க சிறந்த வழி: புளோட்டர் பண்டு திட்டம்!
வீட்டிலிருந்தே மாதம் ரூ.60,000 வரை சம்பாதிக்க வாய்ப்பு: SBI-யின் அதிரடி ஆஃபர்!
Share your comments