ஜூலை-செப்டம்பர் காலாண்டில் சில சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் உயர்த்தியுள்ளது. கடந்த 12 மாதங்களில் நான்காவது முறையாக சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை ஒன்றிய அரசின் நிதியமைச்சகம் உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டில் ஜூலை-செப்டம்பர்-2023 காலாண்டிற்கு, ஒரு வருடம் மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் உயர்த்தியுள்ளது. இருப்பினும், பொது வருங்கால வைப்பு நிதி (PPF) மற்றும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) மீதான வட்டி விகிதத்தில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
எந்த சிறுசேமிப்பு திட்டத்திற்கு வட்டி விகிதம் உயர்வு?
ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான குறிப்பிட்ட சிறுசேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதங்களில் சிறிதளவு அதிகரிப்பை அரசாங்கம் நேற்று அறிவித்தது. திருத்தப்பட்ட வட்டி விகிதங்களின் கீழ், 1 ஆண்டு மற்றும் 2 ஆண்டு கால சேமிப்பு வைப்புத் திட்டங்கள் (1 and 2year time Deposit) 10 bps உயர்வும், 5 ஆண்டு தொடர் வைப்புத் திட்டம் (5year Recurring Deposit) 30 bps வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் எவ்வளவு இருந்தது?
1 ஆண்டு டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதம் கடந்த காலாண்டில் 6.8 சதவீதமாக இருந்த நிலையில் அதனை நடப்பு காலாண்டில் 6.9 சதவீதமாகவும், 2 ஆண்டு டெபாசிட் திட்டத்திற்கான வட்டி விகிதத்தை 6.9 சதவீதத்திலிருந்து 7.0 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 5 ஆண்டு தொடர் வைப்புத் தொகைக்கான வட்டி விகிதம் கடந்த காலாண்டில் 6.2 சதவீதமாக இருந்த நிலையில், அதனை 6.5 சதவீதமாக உயர்த்தியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாற்றப்பட்ட புதிய வட்டி விகித கட்டணங்கள் ஜூலை 1 (இன்று) முதல் அமலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
மாற்றமில்லாத சிறுசேமிப்புத் திட்டங்கள் என்ன?
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) (7.1 சதவீதம்), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) (7.7 சதவீதம்), கிசான் விகாஸ் பத்ரா (7.5 சதவீதம்), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS) (8.2 சதவீதம்), மற்றும் சுகன்யா சம்ரிதி போன்ற பிரபலமான திட்டங்களுக்கான விகிதங்கள் (8 சதவீதம்) போன்றவை கடந்த காலாண்டில் இருந்த வட்டி விகிதத்திலேயே தொடர்கிறது.
கடந்த இரண்டு காலாண்டுகளில், சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ், கிசான் விகாஸ் பத்ரா, மாதாந்திர வருமான சேமிப்புத் திட்டம் மற்றும் அனைத்து அஞ்சலக நேர வைப்புத்தொகை போன்ற பிரபலமான திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அரசாங்கம் உயர்த்திய நிலையில் இந்த காலாண்டு உயர்த்தவில்லை. இதனால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
மூத்த குடிமக்கள், குழந்தைகள் மற்றும் குறைந்த வருமானம் உள்ள தனிநபர்கள் உட்பட சமூகத்தின் பல்வேறு பிரிவு மக்களையும் சேமிப்பு திட்டத்தில் ஈடுபடுத்த இத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் பாதுகாப்பான தன்மையானது பிற முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடும்போது நன்மை பயக்கக்கூடியதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
சிலிண்டர் விலை உயர்வு முதல் வங்கி விதிகள் மாற்றம் வரை- ஜூலை முதல் நாளே இப்படியா?
Share your comments