கேரளா முழுவதும் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டப் பாம்புகளைப் பிடித்துள்ள பாம்பு பிடி மன்னன் சுரேஷ், இதற்கு முன்னரும் பலமுறை பாம்பு கடித்து சிகிச்சை பெற்றுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வாவா சுரேஷ். (வயது 48). சுரேஷ் பாம்பு பிடிப்பதில் வல்லவர்.
திருவனந்தபுரம் மட்டுமின்றி மாநிலம் முழுவதும் ஆபத்தான பாம்புகளையும் லாவகமாகப் பிடித்து வனத்துறையிடம் ஒப்படைப்பார். பின்னர் அதனை பத்திரமாக அடர்ந்த காட்டு பகுதிக்குள் விடுவதற்கும் ஏற்பாடு செய்வார். இதனால் அவரை கேரள மக்கள் பாம்பு பிடி மன்னன் என்று அழைப்பது வழக்கம்.
மேலும் எங்காவது பாம்பு பிடிக்க வேண்டுமென்றால் மக்கள் சுரேசைத்தான் அழைப்பார்கள். பாம்புப் பிடிக்கும் பணியை சுரேஷ் பள்ளிப் பருவத்தில் இருந்தேத் தொடங்கி விட்டார். கேரளா முழுவதும் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாம்புகளை பிடித்துள்ளார்.
இதில் 200-க்கும் மேற்பட்ட பாம்புகள் அரியவகை ராஜநாகம் மற்றும் நல்ல பாம்பு வகையை சேர்ந்தவை. இந்த வகைப் பாம்புகளைப் பார்த்தாலே மற்றவர்களுக்கு அச்சம் தோன்றும். ஆனால் சுரேஷ்ஷிற்கோ எந்த வித பயமும் ஏற்படாது. ஏனெனில், இப்பாம்புகளை அனாயசமாகப் பிடித்து சாக்கில் அடைத்துத் தூக்கி செல்வதில் அவர் வல்லவர்.
பாம்புக்கடி
இந்த நிலையில் கோட்டயம் பகுதியை அடுத்த குறிச்சியில் குடியிருப்பு பகுதிக்குள் நல்லப்பாம்பு ஒன்றுச் சுற்றி வருவதாக அப்பகுதி மக்கள் சுரேசுக்குத் தகவல் தெரிவித்தனர். அந்தப் பாம்பைப் பிடிக்க சுரேஷ், குறிச்சிக்கு சென்றார். மாலை 4.30 மணிக்கு பாம்பு இருக்கும் இடத்தை கண்டுபிடித்து அதனைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார். லாவகமாகப் பாம்பைப் பிடித்து விட்ட சுரேஷ், அதனை ஒரு பிளாஸ்டிக் பையில் அடைக்க முயன்றார். அப்போது, திடீரென சீறியப் பாம்பு, சுரேஷின் வலது முழங்காலில் கடித்துவிட்டது.
சிகிச்சை
பாம்பு கடித்தப் பின்னரும் அதிர்ச்சியடையாத சுரேஷ், தான் பிடித்தப் பாம்பை சாக்குபையில் அடைத்து, வனத்துறையிடம் ஒப்படைத்தார். அடுத்த சில நிமிடங்களில் அதே இடத்தில் தலைசுற்றி மயங்கி விழுந்தார்.உடனே அப்பகுதி மக்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதல் உதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாநில சுகாதார மந்திரி வீணா ஜார்ஜூம், பாம்பு பிடி மன்னன் சுரேஷ்ஷிற்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் இலவசமாக அளிக்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
பாம்பு பிடி மன்னன் சுரேஷ், இதற்கு முன்னரும் பலமுறை பாம்பு கடித்து சிகிச்சை பெற்றுள்ளார். இதில் ராஜநாகம், நல்ல பாம்பு போன்ற பாம்புகளும் இவரை கடித்து உள்ளன.
சுரேசுக்கு வனத்துறையின் பாம்பு பண்ணையில் வேலை வழங்க முன்வந்தபோதும் அதனை ஏற்க மறுத்தவர் சுரேஷ். அதேநேரத்தில் பாம்புப் பிடிக்கும் பணியைத் தனது சொந்த செலவில் செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க...
Share your comments