தமிழக அரசு அறிவித்த நகைக்கடன் தள்ளுபடி சலுகையை அரசு அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்தி, கொள்ளை லாபம் பெற்றிருப்பது அம்பலமாகியுள்ளது. மோசடி செய்திருப்பது உண்மையா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தள்ளுபடி அறிவிப்பு
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரை நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் காரணமாக தகுதியான நபர்களைக் கண்டறிவதற்காக நகைக் கடன் பெற்றவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட்டன. நகைக்கடன் தள்ளுபடி விஷயத்தில் தகுதி நிலைகளும் தமிழக அரசால் வகுக்கப்பட்டிருந்தது.
தகவல் சேகரிப்பு
கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கணக்கு எண், ஆதார் எண், குடும்ப அட்டை எண், முகவரி, மொபைல் நம்பர் எண் உள்ளிட்ட தகவல்களைச் சேகரித்து கணினி மூலம் விரிவாக ஆய்வு செய்யப்பட்டன.
விண்ணப்பம் நிராகரிப்பு
பல்வேறு ஆய்வுகள் மற்றும் சரிபார்ப்புகளுக்குப் பிறகு நிறைய நகைக் கடன் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன. மொத்தம் 48,84,726 நகைக்கடன் விவரங்கள் கணினி மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டதில் 35,37,693 கடன்கள் நகைக் கடன் தள்ளுபடி பெறத் தகுதியில்லாதவை என்று அறிவிக்கப்பட்டது. வெறும் 13,47,033 நகைக் கடன்கள் மட்டுமே தள்ளுபடி பெறத் தகுதியானவை என்று தமிழக அரசு கூறியது.
37 ஆயிரம் பேர் நீக்கம்
தமிழக அரசு கடைசியாக வெளியிட்டிருந்த அறிவிப்பில் மொத்தம் 37,000 பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. இவர்கள் அனைவரும் நகைக்கடன் பெறத் தகுதியற்றவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களிடமிருந்து மொத்தம் ரூ.160 கோடி திரும்பப் பெறப்படுகிறது. அதாவது நகைக் கடன் தள்ளுபடிக்கான தொகையில் மேற்கூறிய ரூ.160 கோடி தமிழக அரசுக்கு மிச்சமாகிறது.
அரசு ஊழியர்கள் மோசடி
சாமானிய மக்களுக்கு உதவுவதற்காகவே இந்த நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. ஆனால் அரசு அதிகாரிகள் பலர் இத்திட்டத்தைத் தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. கூட்டுறவுத் துறை அதிகாரிகள், அரசு நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், மத்திய - மாநில அரசு ஊழியர்கள், பென்சனர்கள் போன்ற பலர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முயன்றுள்ளனர். இதனால் சாமானிய மக்களுக்கு உதவி கிடைக்காமல் போகிறது.
ஆதார் எண், குடும்ப அட்டை எண், வங்கிக் கணக்கு எண் போன்ற விவரங்களில் தவறுகள் இருந்ததால் நிறையப் பேரின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. அதோடு, தவறான பயனாளிகளுக்கும் உதவி கிடைத்துள்ளது.
மறு ஆய்வு
பயனாளிகளின் விவரங்களைப் பதிவுசெய்யும்போதும் கணக்கிடும்போதும் அதிகாரிகள் செய்த சிறு தவறுகளால் தங்களுக்கு உதவி கிடைக்காமல் போய்விட்டதாகப் பயனாளிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதனால் மீண்டும் மறு ஆய்வு செய்து தங்களுக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க...
Share your comments